/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நஷ்டஈடு தர கால தாமதம் இன்சூரன்ஸ் அலுவலகத்தை ஜப்தி செய்ய முயற்சி
/
நஷ்டஈடு தர கால தாமதம் இன்சூரன்ஸ் அலுவலகத்தை ஜப்தி செய்ய முயற்சி
நஷ்டஈடு தர கால தாமதம் இன்சூரன்ஸ் அலுவலகத்தை ஜப்தி செய்ய முயற்சி
நஷ்டஈடு தர கால தாமதம் இன்சூரன்ஸ் அலுவலகத்தை ஜப்தி செய்ய முயற்சி
ADDED : நவ 01, 2025 02:49 AM
திண்டிவனம்: விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு தராமல் காலம் தாழ்த்தியதற்காக திண்டிவனத்திலுள்ள இன்சூரன்ஸ் அலுவலகத்தை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், நரசிம்மபுரத்தை சேர்ந்த முடியப்பன் மகன் சிவக்குமார்,22; வேன் கிளீனர். இவர் கடந்த, 2001ம் ஆண்டு, டிச.2,ம் தேதி காலை 8:40 மணியளவில், பால் வேனில், ஆரணியிலிருந்து போளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அந்த வேன், போளூர் அருகே சென்ற போது, அங்கிருந்த ரயில்வே கேட் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிவக்குமார், வேலுார் சி.எம்.சி.மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டார்.
இந்த விபத்து தொடர்பாக சிவக்குமார் தந்தை முடியப்பன், 62; சார்பில் செஞ்சியிலுள்ள சார்பு நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி, மனுதாரருக்கு 5 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் வழங்க யூனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனிக்கு உத்தரவிட்டார்.
பின்னர் இந்த வழக்கு திண்டிவனத்திலுள்ள முதன்மை சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கடந்த, 2024ம் ஆண்டு பிப். 22 ம் தேதி நஷ்ட ஈடு வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஜப்தி செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஜப்தி உத்தரவு வழங்கிய போது, திண்டிவனத்திலுள்ள இன்சூரன்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடு தொகை விரைவில் கட்டுவதாக கூறியதால், ஜப்தி செய்யவில்லை.
இதைத்தொடர்ந்து, வழக்கை விசாரித்த முதன்மை சார்பு நீதிபதி கிறிஸ்டியன், மனுதாரருக்கு 8 லட்சத்து 7 ஆயிரத்து 402 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், இதற்காக திண்டிவனம், மயிலம் ரோட்டிலுள்ள யூனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகத்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார்.
இதன் பேரில் கோர்ட் கட்டளை நிறைவேற்றுநர் உமா, நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் இன்சூரன்ஸ் கிளை மேலாளர் மணிமுத்தழகியிடம், நோட்டீஸ் வழங்கினார்.
இதற்கு கிளை மேலாளர் நஷ்ட ஈடு தொகையை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி கூறியதை தொடர்ந்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

