/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'ஏசி' இன்றி இயங்கும் ஏ.டி.எம்., மையங்கள்
/
'ஏசி' இன்றி இயங்கும் ஏ.டி.எம்., மையங்கள்
ADDED : பிப் 13, 2024 05:23 AM
கோடை துவங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி எடுக்கத் துவங்கி விட்டது. வெயிலை சமாளிக்க வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், பஸ்கள், திரையரங்குகள் என அனைத்து இடங்களிலும் 'ஏசி' மயாமாகி வருகின்றன.
வங்கிகள் மட்டுமின்றி வங்கிகள் மூலம் இயக்கப்படும் ஏ.டி.எம்., மையங்களும் 'ஏசி' வசதியுடன் திறக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் என 500க்கும் ேமற்பட்ட ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இவற்றில் 10 சதவீதம் ஏ.டி.எம்., மையங்களில் கூட தற்போது 'ஏசி' வேலை செய்ய வில்லை. பல இடங்களில் 'ஏசி' இயந்திரங்கள் உடைந்துள்ளது.
தற்போது பல ஏ.டி.எம்., மையங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., இயந்திரங்களும், பாஸ் புத்தகம் என்ட்ரி போடும் இயந்திரமும் உள்ளன. இதனால், இந்த மையங்களின் ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளே வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு இயந்திரம் உள்ள ஏ.டி.எம்., மையத்திலும் அனைத்து வாடிக்கையாளர்களும் உள்ளே சென்று வரிசையில் நிற்கின்றனர். பல இடங்களில் 'ஏசி' பழுதாகி வேலை செய்யாததால் வாடிக்கையாளர்கள் வியர்வையில் நனைய வேண்டி உள்ளது.
இந்த மையங்களில் 'ஏசி' வசதி செய்திருப்பது வாடிக்கையாளர்களின் வசதிக்காக மட்டுமின்றி அங்குள்ள ஏ.டி.எம்., இயந்திரங்கள் அதிக அளவில் சூடானால் செயலிழக்க வாய்ப்புள்ளது.
எனவே வங்கிகளின் மண்டல அதிகாரிகள் ஏ.டி.எம்., மையங்களில் ஆய்வு செய்து கோடையின் போது 'ஏசி' மெஷின்கள் வேலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.