/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிப்காட்டில் உணவு பூங்கா; முதல்வர் திறந்து வைப்பு
/
சிப்காட்டில் உணவு பூங்கா; முதல்வர் திறந்து வைப்பு
ADDED : அக் 14, 2025 06:57 AM

திண்டிவனம்; திண்டிவனம் அடுத்த பெலாக்குப்பம் சிப்காட் வளாகத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் மெகா உணவு பூங்கா திறப்பு விழா நடந்தது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, சிப்காட்டில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி உணவு பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் கூறுகையில், 'திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 157.91 ஏக்கர் பரப்பளவில் மெகா உணவு பூங்காவை தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
இந்த பூங்கா சாலை, குடிநீர், மழை நீர் வடிகால் வசதிகள் மற்றும் தெரு மின் விளக்குகள் போன்ற அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த உணவு பூங்காவினால் இப்பகுதி வளர்ச்சியடைவது மட்டுமில்லாமல், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகுக்கிறது' என்றார்.
மயிலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், சிப்காட் திட்ட அலுவலர் செல்வராணி, உதவி பொறியாளர் கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.