/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குழந்தைகளிடம் எரிமலைக்கு ஒப்பான ஆற்றல் உள்ளது; 'தினமலர்' வித்யாரம்பம் நிகழ்ச்சியில் எஸ்.பி., சரவணன் பேச்சு
/
குழந்தைகளிடம் எரிமலைக்கு ஒப்பான ஆற்றல் உள்ளது; 'தினமலர்' வித்யாரம்பம் நிகழ்ச்சியில் எஸ்.பி., சரவணன் பேச்சு
குழந்தைகளிடம் எரிமலைக்கு ஒப்பான ஆற்றல் உள்ளது; 'தினமலர்' வித்யாரம்பம் நிகழ்ச்சியில் எஸ்.பி., சரவணன் பேச்சு
குழந்தைகளிடம் எரிமலைக்கு ஒப்பான ஆற்றல் உள்ளது; 'தினமலர்' வித்யாரம்பம் நிகழ்ச்சியில் எஸ்.பி., சரவணன் பேச்சு
ADDED : அக் 03, 2025 02:10 AM

விழுப்புரம்: குழந்தைகளிடம் எரிமலைக்கு ஒப்பான ஆற்றல் இருப்பதாக, எஸ்.பி., சரவணன் பேசினார்.
'தினமலர்' நாளிதழ் மற்றும் விழுப்புரம் அடுத்த வ.பாளையம் சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி இணைந்து நடத்திய வித்யாரம்பம் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
குழந்தைகளின் கல்வியின் எதிர்காலத்தை துவக்கும் முதல் படிக்கான வாய்ப்பை 'தினமலர்' நாளிதழ், பெற்றோர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 'தினமலர்' நாளிதழின் இந்த நிகழ்வு, உங்கள் குழந்தைகளுக்கு மிக முக்கியமானது. மனித ஆற்றல், திறமை, வெற்றி குறித்து ஆராய்ச்சியாளர்கள், ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர்.
அதில், ஒவ்வொரு குழந்தையிடமும் எரிமலைக்கு ஒப்பான ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் குழந்தைகளிடம் உள்ள எரிமலையான திறமைகளை வெளி கொண்டுவர வேண்டியது பெற்றோர்களின் கடமை. ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது என்று கூறுவர்.
குழந்தைகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும். குழந்தைகளின் வெற்றி அபரிமிதமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் உதாரணமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு கேட்பதைவிட, பார்ப்பது தான் தாக்கத்தை உருவாக்கும். அவர்கள் முன்னிலையில், பெற்றோர்கள் சண்டை யிடுதல் உள்ளிட்ட எந்த செயலில் ஈடுபட்டாலும், அது தான் அவர்களின் மனதில் பதியும்.
குழந்தைகளிடம் மொபைல் போன் பழக்கத்தை சிறிய வயதில் கொண்டுவரக் கூடாது. நாம் அனுபவிக்காததை, நம் குழந்தைகள் அனுபவிக்கட்டும் என பெற்றோர்கள் நினைக்கின்றனர். அப்படி நினைக்காமல், எதில் சலுகை கொடுக்க வேண்டுமோ அதில் மட்டும் தான் சலுகை வழங்க வேண்டும்.
குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளிடம் விளையாட்டு உள்ளிட்ட ஆர்வத்தை கண்டறிந்து கற்றுக்கொடுக்க வேண்டும். சிறிய, சிறிய விஷயங்களை குழந்தைகளிடம் செதுக்க வேண்டும். 'குட் டச்; பேட் டச்' உள்ளிட்ட விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.
கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுரை வழங்க வேண்டும். சேமிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் மருத்துவ காப்பீடு செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு தொடர்பான பயிற்சி அளிக்க வேண்டும்.
இவ்வாறு எஸ்.பி., சரவணன் பேசினார்.