ADDED : செப் 20, 2024 09:49 PM
விழுப்புரம் : காணை ஒன்றியத்தில், 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் தொடக்கப் பள்ளி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.
காணை ஒன்றிய தொடக்கப் பள்ளியில், முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் ஒன்று முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுவதை, கலெக்டர் பார்வையிட்டு, உணவின் தரம் குறித்து சாப்பிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதிகளை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும் ஆய்வு செய்தார். பின், காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார்.
அங்கு, சிகிச்சை பெற வந்தோருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்ததோடு, மட்டுமின்றி மருந்து கையிருப்பு விபரம், டாக்டர்கள், செவிலியர்கள் வருகை பதிவேடு, அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தார்.
தாசில்தார் கனிமொழி உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.