/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆரோவில் அறக்கட்டளை நிலம் விற்றதில் முறைகேடு தலைவர், செயலாளர் மீது எஸ்.பி.,யிடம் புகார்
/
ஆரோவில் அறக்கட்டளை நிலம் விற்றதில் முறைகேடு தலைவர், செயலாளர் மீது எஸ்.பி.,யிடம் புகார்
ஆரோவில் அறக்கட்டளை நிலம் விற்றதில் முறைகேடு தலைவர், செயலாளர் மீது எஸ்.பி.,யிடம் புகார்
ஆரோவில் அறக்கட்டளை நிலம் விற்றதில் முறைகேடு தலைவர், செயலாளர் மீது எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : மார் 06, 2026 06:50 AM

விழுப்புரம்: ஆரோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு விற்று முறைகேடு செய்துள்ளதாக, அறக்கட்டளை தலைவரான கவர்னர், செயலாளர் மீது ஆரோவில் ஊழியர்கள் தரப்பில் அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அறக்கட்டளையில் பணிபுரியும் ஊழியர்கள் அருண்அம்பத்தி, பிரபு பொன்முடி, பாலமுருகன் உள்ளிட்டோர், சமூக ஆர்வலர் பியூஷ்மானுஷ் தலைமையில், நேற்று காலை விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., சாய்பிரனீத்திடம் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து, பியூஷ்மானுஷ் உள்ளிட்டோர் கூறியதாவது:
ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. அதில் ஒன்றாக, தற்போது ஆரோவில் அறக்கட்டளைக்கு சொந்தமாக 16 ஏக்கர் நிலத்தை முறைகேடாக மிக குறைந்த விலைக்கு விற்றுள்ளனர்.
ஆரோவில் தலைவரான கவர்னர் ரவி, செயலாளர் ஜெயந்தி ரவி ஆகியோர் சேர்ந்து, அரசு நிலமதிப்பை விட மிக குறைந்த விலைக்கு நிலத்தை விற்றுள்ளனர். ஆரோவில் பகுதியில் கடந்த 1965ம் ஆண்டில் அன்னை இருந்தபோது, சொந்தமாக 65 ஏக்கர் அளவில் நிலத்தை வாங்கி இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்த அளித்திருந்தார்.
தற்போது, ஆரோவில் அறக்கட்டளையை நிர்வகித்து வருவோர், அதில் 16 ஏக்கர் நிலத்தை, மொராட்டாண்டி டோல்கேட் சுற்றியுள்ள பகுதியில் உள்ள நிலத்தை குறைந்த விலைக்கு, கடந்த 2023ம் ஆண்டில் விற்றுள்ளனர்.
அங்கு தற்போது ஒரு சதுரடி நிலம் 6000 ரூபாய் வரை விற்கிறது, ஆனால் இவர்கள் 16 ரூபாய்க்கு விலை பேசி விற்றுள்ளனர். இதனால், அரசுக்கே வரி வருவாய் 40 கோடி ரூபாயும், அறக்கட்டளைக்கு 250 கோடி ரூபாய் அளவிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இடத்தை வாங்கியவர்கள், வீட்டுமனை போட்டு பன்மடங்கு விற்கின்றனர். இதனால், ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கோடிக்கணக்கில் பணம் ஆதாயம் அடைந்துள்ளனர்.
எனவே, இடத்தை விற்ற ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கியோர் என 13 பேர் மீது, நாங்கள் புகார் அளித்துள்ளோம். அதன் மீது தமிழக அரசு, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் மனுவை பெற்ற எஸ்.பி., நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

