/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ளை அறிக்கை வெளியிட கவுன்சிலர் கோரிக்கை! சாத்தியமில்லை என சேர்மன் பதில்
/
வெள்ளை அறிக்கை வெளியிட கவுன்சிலர் கோரிக்கை! சாத்தியமில்லை என சேர்மன் பதில்
வெள்ளை அறிக்கை வெளியிட கவுன்சிலர் கோரிக்கை! சாத்தியமில்லை என சேர்மன் பதில்
வெள்ளை அறிக்கை வெளியிட கவுன்சிலர் கோரிக்கை! சாத்தியமில்லை என சேர்மன் பதில்
ADDED : மார் 07, 2024 11:59 AM
வானுார் : ஒன்றியத்தில் திட்டப்பணிகளுக்கு செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை விடுத்து பேசினார்.
வானுார் ஒன்றிய கூட்டம் நேற்று பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நடந்தது. சேர்மன் உஷா முரளி தலைமை தாங்கினார்.
ஒன்றிய துணைச் சேர்மன் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் கார்த்திகேயன், தேவதாஸ், பொறியாளர்கள் குகநாதன், மகேந்திரவர்மன், காமராஜ், அம்பிகா மற்றும் துணை பி.டி.ஓ.,க்கள் செந்தில், ராஜேஷ், பாஸ்கர், பிரியா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் மற்றும் குறைகள் குறித்து பேசியதாவது:
தி.மு.க., கவுன்சிலர் புவனேஸ்வரி பேசுகையில், ஒவ்வொரு பகுதிகளிலும், மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை ஒன்றிய பொறியாளர்கள் ஆய்வு செய்கின்றனர். ஆனால், ஆய்வு செய்வதற்கான தகவல்களை தெரிவிப்பதில்லை.
மேலும், பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டால், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளுக்கு கையெழுத்து பெற அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட பகுதிக்கு தேடிச் செல்ல வேண்டிய அவலம் உள்ளது.
இதற்கு பதிலளித்த பி.டி.ஓ., தேவதாஸ், 'கையெழுத்து பெற நீங்கள் தேடிச் செல்ல வேண்டிய நிலை வேண்டாம். நாங்களே உங்களுக்கு கையெழுத்து பெற்றுத் தருகிறோம்' என்றார்.
பா.ம.க., கவுன்சிலர் ராஜ்குமார் பேசுகையில், திட்டப்பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 5 லட்சம் ரூபாய் சாலை வசதி அமைக்க போதுமானதாக இல்லை. பேவர் பிளாக் சாலை அமைக்கவும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சிமென்ட சாலை அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அ.தி.மு.க., கவுன்சிலர் கணேசன் பேசுகையில், ஒன்றிய பொது நிதி வரவு, செலவு கணக்கு மன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில் 2 கோடியே 59 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் வரவு எனவும், 1 கோடியே 23 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் செலவானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செலவான தொகை போக மீதியுள்ள தொகையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யலாம். அதன் மூலம் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும். திட்டப்பணிகளுக்கு செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இதற்கு பதிலளித்த ஒன்றிய சேர்மன் உஷா முரளி, 'சட்டசபையில் கூட வெள்ளை அறிக்கை வெளியிட்டது கிடையாது. அப்படி இருக்கும் போது, ஒன்றிய கூட்டத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடுவது என்பது சாத்தியமில்லை' என்றார். அதனைத்தொடர்ந்த கூட்டம் நிறைவடைந்தது.

