
குட்கா விற்றவர் கைது
கள்ளக்குறிச்சி: சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அண்ணாநகரில் உள்ள டிபன் சென்டரில், குட்கா விற்றது தெரிய வந்தது. உடன், கடை உரிமையாளரான ஏமப்பேரைச் சேர்ந்த சிங்காரம் மகன் பிரபாகரன், 47; அவரது மனைவி ராஜேஸ்வரி, 45; ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து, பிரபாகரனை கைது செய்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கிராவல் மண் திருடியவர் கைது
கள்ளக்குறிச்சி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பொற்படாக்குறிச்சி ஏரிக்கரை வழியாக கிராவல் மண் கடத்திச் சென்ற மினி டிப்பர் லாரி மற்றும் 1 யூனிட் கிராவல் மண்ணுடன் பறிமுதல் செய்து, லாரியை ஓட்டிச் சென்ற உலகங்காத்தான் வெங்கடேசன் மகன் ஸ்ரீதர், 21; பொற்படாக்குறிச்சி கருப்பன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து, ஸ்ரீதரை கைது செய்தனர்.
மகன் சாவில் சந்தேகம்: தாய் புகார்
சேலம் மாவட்டம், திருமலைவாசல் அடுத்த வடகுமரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஆனந்தன், 31; லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை பொற்படாகுறிச்சியில் உள்ள தனது மனைவி, பிள்ளைகளை பார்க்க வந்துள்ளார். பின், வேலைக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் ஏமப்பேர் காட்டுகொட்டாய் பகுதியில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஆனந்தனின தாய் அலமேலு, மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மது பாட்டில் விற்ற பெண் கைது
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கீழ்பாடி கிராமத்தில், வேலாயுதம் மனைவி அஞ்சலை, 54; இவரது மகன் ஏழுமலை ஆகியோர் வீட்டின் பின்புறமாக மதுபாட்டில் விற்றது தெரிந்தது. உடன், அஞ்சலையை கைது 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஏழுமலையை தேடி வருகின்றனர்.
கஞ்சா விற்றவர் கைது
மரக்காணம்: மரக்காணம் போலீசார் கோட்டிக்குப்பம் பகுதியில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த கோட்டிக்குப்பத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் கமலக்கண்ணன்,24; என்பவரிடம் சோதனை செய்ததில் 100 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடன், கமலக்கண்ணன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
கோட்டக்குப்பம்: சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் கோட்டக்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, 3 நெம்பர் லாட்டரி சீட்டு விற்ற பெரிய காலாப்பட்டு பெருமாள் நகரைச் சேர்ந்த ரவி, 56; என்பவரை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
குட்கா விற்ற பெண் கைது
விழுப்புரம்: சாலைஅகரம் பகுதியில், வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் ரோந்து சென்றார். அப்போது, அந்த பகுதியில் சிவக்குமார் மனைவி மகேஸ்வரி, 40; என்பவரது பெட்டிக்கடையில் குட்கா விற்றது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து, குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த கடைக்கு குட்கா சப்ளை செய்தவர் நபரை தேடி வருகின்றனர்.
கிணற்றில் வாலிபர் உடல்: போலீஸ் விசாரணை
உளுந்துார்பேட்டை: ஒலைனுார் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் சதீஷ்குமார், 19; இவர் உளுந்துார்பேட்டையில் உள்ள நகைக் கடையில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று மாலை 5:00 மணியளவில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சதீஷ்குமார் இறப்புக்க காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
சிறுமியிடம் சில்மிஷம்: போலீஸ் வழக்கு
உளுந்துார்பேட்டை: எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் பவுல் பீட்டர் அந்தோணிசாமி, 50; இவர், 17 வயது மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். சிறுமி யின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற கிராம மக்கள் பவுல்பீட்டர்அந்தோணியை பிடித்து தர்ம அடி கொடுத்து திருநாவலுார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேன் - டவுன் பஸ் மோதல்: 6 பேர் காயம்
விழுப்புரம்: விழுப்புரத்திலிருந்து நத்தமேடு செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று காலை 10:30 மணிக்கு சென்றது. கல்பட்டு - சிறுவாக்கூர் கிராமச் சாலையில் சென்றபோது, எதிரே திருவெண்ணைநல்லுார் நோக்கி வந்த மகிந்திரா வேன், பஸ் மீது மோதியது. இந்த விபத்தில், வேன் டிரைவர் கண்ணாரம்பட்டு சக்திகுமார், 35; மற்றும் வேனில் வந்த கல்பட்டு சுந்தர், 26; அனுசுயா, 34; ஆனந்தி, 37; அந்தோணிராஜ், 38; கிருஷ்ணன், 75; என 6 பேர் காயமடைந்தனர். அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து காணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஹிட்டாச்சி விழுந்து 3 பைக்குகள் சேதம்
திண்டிவனம்: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டைச் சேர்ந்தவர் சேதுகுமார், 41; டிரைவர். இவர் நேற்று பிற்பகல் லாரியில் ஹிட்டாச்சி வாகனத்தை ஏற்றிக்கொண்டு, விநாயகபுரத்திலிருந்து சேத்துப்பட்டு நோக்கி சென்றார். வெள்ளிமேடுப்பேட்டை கூட்ரோட்டிற்கு பிற்பகல் 2:30 மணியளவில் வந்த போது, குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க லாரியை சடன் பிரேக் போட்டார். அப்போது லாரியில் இருந்த ஹிட்டாச்சி வாகனம் கீழே சரிந்தது. அங்குள்ள டீக்கடைக்கு எதிரில் நிறுத்தியிருந்த 3 பைக்குகள் மீது விழுந்ததில் பைக்குகள் சேதமானது. வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தட்டிக்கேட்ட தகராறு: ஒருவர் கைது
விழுப்புரம்: விழுப்புரத்தைச் சேர்ந்தவர் அகமதுஷெரீப், 27; இவர், நேற்று முன்தினம் இரவு வடக்குத்தெரு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, முத்தோப்பு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், பைக்கில் வேகமாக சென்றதை தட்டி கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த சிறுவன், தனது நண்பர்களான கீழ்ப்பெரும்பாக்கம் மன்சூர்அலி மகன்கள் சம்மான், 23; ஏஜாஸ், 28; ஆகியோர்களையும் அழைத்து வந்து, அகமதுஷெரீப்பை தாக்கினார். அகமதுஷெரீப் அளித்த புகாரின்பேரில், சிறுவன் உட்பட 3 பேர் மீதும், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
மணல் கடத்தியவர் கைது
திருவெண்ணெய்நல்லுார்: சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் மாரங்கியூர் தென்பெண்ணை ஆற்று பகுதியில் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மணல் கடத்திய சிறுவானுார் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டக்காரன் மகன் கலியபெருமாள், 30; என்பவரை கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது
மரக்காணம்: மரக்காணம், மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மனைவி சரிதா, 40; சம்புவெளி தெருவைச் சேர்ந்தவர் கணபதி மனைவி பாக்கியலட்சுமி, 40; இருவரும் வீட்டில் மது பாட்டில் விற்பதாக மரக்காணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அவர்கள் வீட்டின் பின்புறத்தில் சோதனை செய்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, சரிதா, பாக்கியலட்சுமி இருவரையும் கைது செய்தனர்.