பெண்ணை ஏமாற்றியவர் மீது வழக்கு
வானுார் அடுத்த ஒழுந்தியாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் சபாபதி, 29; இவர், 23 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சபாபதி வேறு ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகுவதாக அந்த பெண் கோட்டக்குப்பம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், சபாபதி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தம்பதியை தாக்கியவர் மீது வழக்கு
விழுப்புரம் அடுத்த கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோன், 35; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜ், 26; இவர்களுக்குள் முன்விரோதம் உள்ளது. கிறிஸ்துராஜ் குடிபோதையில் அடிக்கடி ஆரோனை திட்டியுள்ளார். கடந்த 27ம் தேதி மாலை குடிபோதையில் வந்த கிறிஸ்துராஜ், ஆரோன் வீட்டிற்குள் புகுந்து, அவரையும் அவரது மனைவி லாவண்யாவையும் தாக்கினார். புகாரின் பேரில், காணை போலீசார் கிறிஸ்துராஜ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
விழுப்புரம் அடுத்த கஞ்சனுாரைச் சேர்ந்தவர் ராஜாராம், 54; கூலித் தொழிலாளி. இவர், நேற்று மதியம் செஞ்சியிலிருந்து விழுப்புரம் நோக்கி பைக்கில் சென்றார். தென்னமாதேவி அருகே வந்தபோது, பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிலிண்டர்களை பதுக்கியவர் கைது
விழுப்புரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையிலான போலீசார், நேற்று விக்கிரவாண்டி மெயின்ரோடு பகுதியில் உள்ள இரும்பு கடை அருகே உள்ள வீட்டில் சந்தேகத்தின் பேரில், சோதனை நடத்தினர். அப்போது, அரசு மானிய விலை சிலிண்டர்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்றது தெரிந்தது. அங்கிருந்த 9 சிலிண்டர்களை கைப்பற்றிய போலீசார், அதனை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த முருகன், 47; என்பவரை கைது செய்தனர்.
மகள் மாயம்: தந்தை புகார்
மேல்மலையனுார் அடுத்த மானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகள் தமிழ்மொழி, 22; பி.எஸ்சி., பட்டதாரி. இவர், செஞ்சியில் உள்ள மெடிக்கலில் வேலை செய்து வந்தார். கடந்த 26ம் தேதி இரவு வேலை முடிந்து கடையில் இருந்து புறப்பட்டவர் வீடு திரும்பவில்லை. ஏழுமலை அளித்த புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தொழிலாளி மாயம்: போலீஸ் விசாரணை
கிளியனுார் அடுத்த எறையானுாரைச் சேர்ந்தவர் லைலா மகன் வினோத்ராஜ், 34; திருமணமாகவில்லை. இவர் வெளியூரில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்தாண்டு டிசம்பர் 26ம் தேதி வெளியூருக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. லைலா, அளித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.