மணல், மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி. புதுப்பாளையம் பகதியில் இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பெண்ணைாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன், 33; என்பவரை கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து சி.மெய்யூர் கிராம பகுதியில் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் மது பாட்டில் விற்ற மதியழகன், 60; என்பவரை கைது செய்து, 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
குட்கா விற்றவர் கைது
ஏமப்பூர் முத்தையா நகர் பகுதியில் பெட்டிக் கடையில் குட்கா பொருட்கள் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மனைவி கஸ்துாரி, 48; என்பவரை கைது செய்து, 39 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
முதியவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி அடுத்த நின்னையூரைச் சேர்ந்தவர் வீரப்பன், 88; இவர் தனது வீட்டின் முன்பு எம் சாண்ட் கொட்டியிருந்தார். கடந்த 14 ம் தேதி இரவு 9:00 மணிக்கு மண்ணை எடுக்ககோரி, வீரப்பன் வீட்டின் அருகே வசிக்கும் ஏழுமலை மனைவி செல்வி, மணி மகன் கார்த்திகேயன் ஆகியோர் வீரப்பனிடம் தகராறு செய்து தாக்கி. கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் செல்வி, கார்த்திகேயன் ஆகியோர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வேகமாக பைக் ஓட்டியவர் கைது
விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் சுதன் மற்றும் போலீசார், நேற்று பழைய பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக பைக் ஓட்டி வந்த ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்த பாஸ்கரன் மகன் வீரன், 22; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
2 பேர் மாயம்: போலீஸ் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்தவர் ஜஸ்டின் நிர்மல்ராஜ் மகன் ஜெவின் பியோ சேவியர், 19; கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர் விடுதியில் தங்கி எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு படித்து வருகிறார். தேர்வில் 2 பாடங்களில் தேர்ச்சி பெறாததால் மன உளைச்சலில் இருந்த இவரை கடந்த 15ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இதே போன்று கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் அப்துல்மஜித் மகன் ஆதம், 31; டிரேடிங் பணி செய்து வருகிறார். கடந்த 11ம் தேதி திருவாரூரில் உள்ள நபரை பார்க்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி யாஸ்மின் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தம்பி மாயம்: அண்ணன் புகார்
விக்கிரவாண்டி அடுத்த சேஷாங்கனுாரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 44; கொத்தனார். சென்னையில் பணிபுரிந்தார். இவர், கடந்த 8ம் தேதி, விழுப்புரம், சித்தேரிக்கரையில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு செல்வாக, கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. அவரது அண்ணன் புண்ணியமூர்த்தி அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மூதாட்டியிடம் செயின் பறிப்பு
கச்சிராயபாளையம் அடுத்த ஏர்வாய்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் மனைவி அங்கம்மாள், 70; இவர் கணவரை பிரிந்து அதே பகுதியில் உள்ள சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு தனது சகோதரருக்கு சொந்தமான பெட்டி கடை அருகே அமர்ந்திருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர் அங்கம்மாள் அணிந்தருந்த தாலிச் செயினில் பாதியை அறுத்துக் கொண்டு தப்பினர். புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்கள் இருவரை தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் நகை திருட்டு
சங்கராபுரம் அடுத்த பாக்கம்புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி ஜெயந்தி, 29; இவர் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு தீபாவளி பண்டிகை செலவிற்கு பணம் தேவைப்பட்டதால், 10 கிராம் நகை அடகு வைக்க சங்கராபுரத்திற்கு எடுத்துச் சென்றார். தனியார் பஸ்சில் வந்த ஜெயந்தி, பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது ஹேண்ட் பேக்கில் நகை இருந்த மணிபர்ஸ் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து நகை திருடிய நபரை தேடி வருகின்றனர்.
கூழாங்கல் கடத்தல்: லாரி பறிமுதல்
உளுந்துார்பேட்டை அடுத்த பில்லுார் குறுக்கு சாலையில் எடைக்கல் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த லாரியை நிறுத்தினர். லாரியில் இருந்து இறங்கி 2 பேர் தப்பியோடினர். சோதனையில் கூழாங்கல் கடத்திவந்தது தெரியவந்தது. உடன் லாரியை பறிமுதல் செய்து தப்பியோடிய லாரி டிரைவர் நடியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார், 32; மணிகண்டன், 30; ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
மதுபாட்டில் கடத்தியவர் கைது
கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் அறிவழகி தலைமையில் போலீசார் வானுார் அடுத்த ரங்கநாதபுரம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் மது பாட்டில் கடத்தி வந்த திண்டிவனம் அடுத்த விழுக்கம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜ், 37; என்பவரை கைது செய்து, 103 புதுச்சேரி மது பாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
மின் மோட்டார்கள் திருட்டு
வானுார் அடுத்த மொரட்டாண்டியைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், 50; இவருக்கு காமராஜர் நகரில் நிலம் உள்ளது. இவர், நேற்று காலை வழக்கம் போல் தனது நிலத்திற்கு சென்று பார்த்தபோது, மோட்டார் கொட்டகைக்குள் இருந்த மின் ஒயர், 300 நீளமுள்ள கயிறு, மின் மோட்டார் திருடு போனது தெரியவந்தது.
இதே போன்று இவரது நிலத்திற்கு பக்கத்தில் இருந்த இருவரின் நிலத்தில் இருந்த மின் ஒயர்களும் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.