ஆரோவில்லில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஜெர்மன் துாதர் ஆய்வு
ஆரோவில்லில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஜெர்மன் துாதர் ஆய்வு
ADDED : நவ 15, 2026 04:06 PM

வானுார்: ஆரோவில் பகுதிக்கு வருகை புரிந்த ஜெர்மன் துாதர், இந்தியா –ஜெர்மனி இடையே கலாசாரம், கல்வி, சுற்றுச்சூழல் ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை நடத்தினார்.
சர்வதேச நகரமான ஆரோவிலுக்கு இந்தியாவிற்கான ஜெர்மன் துாதர் ஜாஸ்பர் வீக், சென்னையில் உள்ள ஜெர்மன் துணைத் துாதரகத்தின் துணைத் துாதர் மைக்கேல் ஹாஸ்பர் ஆகியோர் நேற்று (நவ.,14) வருகை தந்தனர். அவர்களுக்கு ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்புப் பணி அதிகாரி சீத்தாராமன், ஆரோவில் நகர மேம்பாட்டுக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளரும், குஜராத் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளருமான ஜெயந்தி ரவி காணொளி வாயிலாக பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில் பேசிய அவர், ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னையின் உயரிய கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆரோவில், உலக மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான சர்வதேச நகரமாக திகழ்வதாக குறிப்பிட்டார்.
மேலும், ஆரோவிலில் செயல்படுத்தப்பட்டு வரும் கேலக்ஸி பெருந்திட்டம், 4.4 கி.மீ., நீளமுள்ள கிரவுன் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட நகர வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஜெர்மன் துாதருக்கு விளக்கினார். கிரவுன் சாலைப் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆரோவிலில் சூரிய மின்சக்தி பயன்பாடு, இயற்கை சார்ந்த கட்டடக்கலை, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, இசைக் கருவிகள் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்தியா-ஜெர்மனி இடையே கலாசாரம், கல்வி மற்றும் இளைஞர் பரிமாற்றத்தை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப் பட்டது. டிசம்பரில் நடக்கவுள்ள ஆரோவில் இலக்கியத் திருவிழாவில் ஜெர்மன் எழுத்தாளர்கள், கவிஞர்கள், இசைக்கலைஞர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், ஜெர்மன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆரோவிலில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜெர்மன் துாதர் மற்றும் துணைத் துாதர் ஆகியோர் ஆரோவிலின் ஆன்மீக அடையாளமான மாத்ரிமந்திர், அதன் அழகிய தோட்டங்கள், திறந்தவெளி அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டனர். அப்போது மாத்ரிமந்திரைச் சுற்றி அமைக்கப்பட்டு வரும் ஏரித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் விளக்கப்பட்டது. ஆரோவிலின் வளர்ச்சிப் பணிகளுக்கு நீண்டகாலமாக ஆதரவளித்து வரும் ஜெர்மன் தொழிலதிபர் மைக்கேல் போங்கேயையும் துாதுக்குழுவினர் சந்தித்துப் பேசினர்.
