/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க.,... வாக்குவாதம்; புதிய பஸ் நிலையத்திற்கு பெயர் வைப்பதில் குழப்பம்
/
திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க.,... வாக்குவாதம்; புதிய பஸ் நிலையத்திற்கு பெயர் வைப்பதில் குழப்பம்
திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க.,... வாக்குவாதம்; புதிய பஸ் நிலையத்திற்கு பெயர் வைப்பதில் குழப்பம்
திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க.,... வாக்குவாதம்; புதிய பஸ் நிலையத்திற்கு பெயர் வைப்பதில் குழப்பம்
ADDED : செப் 11, 2024 01:23 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் திறக்கப்பட உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு, கருணாநிதி, ஓ.பி.ஆர்., மற்றும் அண்ணாதுரை என யார் பெயரை வைப்பது என்பது தொடர்பாக தி.மு.க., - அ.தி.மு.க.,வினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் நகர மன்றத்தில் சாதாரண கூட்டம் நேற்று காலை 11:00 மணியளவில் நடந்தது. நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கமிஷனர் பழனி (பொறுப்பு), நகர மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் துவங்கியதும் கவுன்சிலர் ரவிச்சந்திரன், திண்டிவனத்தில் நகராட்சி சார்பில் புதியதாக திறக்கப்பட உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு, 'கலைஞர் நுாற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் வைக்க வேண்டும் என தி.மு.க.,மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் சார்பில் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு தி.மு.க.,கவுன்சிலர்கள் அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.
உடன், தி.மு.க.,வை சேர்ந்த 17 வது வார்டு கவுன்சிலர் ரேணுகா இளங்கோவன், தி.மு.க., சார்பில் பவள விழா கொண்டாடும் நேரத்தில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பெயரை சூட்ட வேண்டும் எனக் கூறி கோரிக்கை மனுவை நகர மன்ற தலைவரிடம் கொடுத்தார்.
இதற்கிடையில், நகராட்சி நிர்வாக இயக்குனர் கடிதத்தை மேற்கொள்காட்டி, புதிதாக திறக்கப்படும் பஸ் நிலையத்திற்கு, ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் பெயரை வைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் சின்னசாமி, பார்த்திபன், பாபு உள்ளிட்டவர்கள் நகராட்சி சார்பில் திறக்கப்படும் பஸ் நிலையத்திற்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என தி.மு.க., கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும்; ஓ.பி.ஆர்.பெயரை வைக்க வேண்டும் என்று கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஏற்க கூடாது என கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து நகர மன்ற தலைவரின் இருக்கைக்கு எதிராக நின்று, கருணாநிதி பெயரை வைக்கும் தீர்மானத்தை ஒருமானதாக நிறைவேற்ற வேண்டும் என முறையிட்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.
அதனைத் தொடர்ந்து, நகரமன்ற தலைவர், புதிய பஸ் நிலையத்திற்கு 'கருணாநிதி நுாற்றாண்டு பேருந்து நிலையம்' என வைக்கப்படும் எனவும், ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியதாகவும் கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., கவுன்சிலர் ஜனார்த்தனன், கார்த்தி, சரவணன், திருமகள் ஆகியோர் தீர்மானத்திற்கு அ.தி.மு.க., ஆதரவு தரவில்லை. தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினர்.
புதிய பஸ் நிலையத்திற்கு 'ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் பெயரை' சூட்ட வேண்டும் என்று கூறினர். இதற்கு தி.மு.க.,கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நான்கு பேரும் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில் 31 வது வார்டு பா.ம.க., கவுன்சிலர் மணிகண்டன், தன்னுடைய வார்டிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நகராட்சி சார்பில் எந்த வேலையும் நடைபெறவில்லை என கூறி, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தீர்மான நகலை மன்றத்தில் கிழித்து போட்டுவிட்டு வெளிநடப்பு செய்தார்.
தொடர்ந்து பேசிய கவுன்சிலர்கள் ரயில்வே காலனியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். நகராட்சிக்கு நிரந்தர கமிஷனரை நியமிக்க வேண்டும். தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
கடைசியில் புதிய பஸ் நிலையத்திற்கு மொத்தம் உள்ள 33 கவுன்சிலர்களில், ஆளுங்கட்சி கொண்டு வந்த தீர்மானம் 25 கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். அ.தி.மு.க.,மற்றும் பா.ம.க., கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.