எஸ்.ஐ.ஆர். குளறுபடிகளை தீர்த்த பிறகுதான் சிறப்பு பணியை துவங்க வேண்டும்: துரை ரவிக்குமார் எம்.பி., பேட்டி
எஸ்.ஐ.ஆர். குளறுபடிகளை தீர்த்த பிறகுதான் சிறப்பு பணியை துவங்க வேண்டும்: துரை ரவிக்குமார் எம்.பி., பேட்டி
ADDED : அக் 24, 2026 06:52 AM
திண்டிவனம்: ‘‘எஸ்.ஐ.ஆர்., குளறுபடிகளை தீர்த்து விட்டுத்தான் சிறப்பு தீவிர திருத்த பணியை துவங்க வேண்டும் என வி.சி., எம்.பி., துரை ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
திண்டிவனத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு தேர்தல் தலைமை அதிகாரி, 2027 ஜனவரி முதல் சிறப்பு சுருக்கத் திருத்தம் (எஸ்.எஸ்.ஆர்.) துவங்கும் என அறிவித்து, அங்கீகாரம் பெற்ற 13 கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்டியிருந்தார்.
அந்த கூட்டத்தை வி.சி.,கட்சி புறக்கணித்து எங்கள் தரப்பில் 4 கோரிக்கைககளை முன்வைத்தோம். தில், முன்பு நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கையை ஒரு மாநிலம் முழுதும் அல்லது பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலோ, விதிகளிலோ அதிகாரம் வழங்கப்படவில்லை.
இரண்டாவது, 2023ல் மோடி அரசு இயற்றிய சட்டத்தின்படி தேர்தல் ஆணையர்கள் ஒட்டு மொத்தமாக முடிவெடுக்க வேண்டும். அதற்கு மாறாக தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமார் மற்ற 2 ஆணையர்களின் எதிர்ப்பை புறக்கணித்து விட்டு எஸ்.ஐ.ஆர். பணியை நாடு முழுதும் நடத்தியுள்ளார். எனவே எஸ்.ஐ.ஆர்., சட்டவிரோதமானது, செல்லாது. இதை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தற்போது சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை எடுப்பது அதிலுள்ள முறைகேடுகளை மூடி மறைக்கும் முயற்சி. எனவே எஸ்.ஐ.ஆர்., குளறுபடிகளை தீர்த்துவிட்டுத்தான் சிறப்பு தீவிர திருத்த பணியை துவங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர்., திருத்த பணி மூலம் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் 1,82,000 பேர் நீக்கப்பட்டுள்ளனர். எனவே நீக்கப்பட்டவர்களின் விபரங்களை ஓட்டுச்சாவடி வாரியாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு கலெக்டர் வழங்க வேண்டும். சம்மந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தி சரிபார்க்க வேண்டும்.
அதுவரை சிறப்பு சுருக்கத் திருத்த பணிகளை (எஸ்.எஸ்.ஆர்.,) மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளக் கூடாது,
இவ்வாறு துரை ரவிக்குமார் எம்.பி., கூறினார்.
