/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்வேலி அமைப்பது குற்றம் செயற்பொறியாளர் எச்சரிக்கை
/
மின்வேலி அமைப்பது குற்றம் செயற்பொறியாளர் எச்சரிக்கை
மின்வேலி அமைப்பது குற்றம் செயற்பொறியாளர் எச்சரிக்கை
மின்வேலி அமைப்பது குற்றம் செயற்பொறியாளர் எச்சரிக்கை
ADDED : செப் 25, 2025 11:34 PM
விழுப்புரம்: பொதுமக்கள், விவசாயிகள் மின் விபத்திலிருந்து பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகளை கண்டமங்கலம் மின் செயற்பொறியாளர் ஏழுமலை தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக் குறிப்பு:
வீடுகளில் மின்கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்க ஆர்.சி.டி., பொருத்த வேண்டும். கட்டடத்திற்கு அருகேவுள்ள மின்கம்பிக்கும் போதிய இடைவெளி அவசியம். உயரழுத்த மின்பாதைக்கும், கட்டடத்திற்கும் 6 அடி இடைவெளியும் தாழ்வழுத்த மின்பாதைக்கும், கட்டடத்திற்கும் 4 அடி இடைவெளியும் கட்டாயம் இருக்க வேண்டும்.
மின்கம்பங்கள், ஸ்டே கம்பிகளில் கயிறு கட்டி துணி காய வைத்தல், கால்நடைகளை கட்டுதலை தவிர்க்க வேண்டும். மின்பாதைகளுக்கு கீழேயும், அருகிலும் நீளமான உலோக கம்பிகள் பொருட்களை கொண்டு செல்ல கூடாது.
மின்கம்பிகள் அறுந்து தரையில் விழுந்தால் அதனருகே செல்லவோ, அதை தொட முயற்சிப்பதோ கூடாது. இது குறித்த அருகேவுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு, மின்வாரிய அலுவலர்கள் வரும் வரை வேறு யாராவது அந்த மின் கம்பிகளை தொடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
மின்சாரம் சார்ந்த பொருட்களில் தனிச்சையாக செயல்படாமல் சம்பந்தபட்ட மின் வாரிய பிரிவு அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும். மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகேவுள்ள மரக்கிளைகளை தனிச்சையாக வெட்ட கூடாது. மின்வாரிய அலுவலர்களை அணுகிட வேண்டும்.
ஈர கைகளோடு சுவிட்சுகள், பிளக்குகள் இயக்குவதை தவிர்த்திட வேண்டும். பொதுமக்கள் தங்களின் வீடு, கடைகளில் ஒயரிங் செய்யும் போது தரமான முத்திரையிட்ட மின் உபகரணங்களை பொருத்துவதோடு, பழுதான உபகரணங்களை உடனே மாற்றிட வேண்டும்.
மின்வேலி அமைப்பது கிரிமினல் குற்றம். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பச்சை மரங்களிலும், இரும்பு கிரில்களிலும் அலங்கார சீரியல் விளக்குகள் கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
விவசாயிகள் பம்பு செட்டில் ஒயரிங் பாதுகாப்பாக உள்ளதா என அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களின் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும். தேவையெனில் அவர்கள் மூலம் சரிசெய்து மழைக்காலங்களில் ஒயர்கள் நசிந்திருந்தால் மின்கசிவு மூலம் மின் விபத்து ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
கனரக வாகனங்களை மின் கம்பிகளுக்கு அடியில் நிறுத்தி பொருட்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ கூடாது. மின்சாரம் சார்ந்த செய்திகளை உடனே, பொதுமக்கள் மின்னகம் மொபைல், 9498794987 எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.