ADDED : செப் 25, 2025 03:36 AM

செஞ்சி : வல்லம் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கூட்ட அரங்கில் விவசாயிகளுக்கு உர மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தலைமை தாங்கினார்.
மண்வளம் காத்திட மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் தக்கை பூண்டு விதைகள், மண்புழு உர உற்பத்தி மையம் அமைத்தல், இயற்கை வேளாண் இடுபொருள் உற்பத்தி மையம் அமைத்தல், இயற்கை வழி வேளாண்மை, பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறினார்.
கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் துரைசாமி பயிர்களில் உர மேலாண்மை முறை, ரசாயன உரங்களை தேவையான அளவில் பயன்படுத்துவது, மண் பரிசோதனையின் அவசியம், உயிர் உரங்களின் பயன்பாடு, நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாக்க இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துதல்,
வேப்பம் புண்ணாக்கு, வேப்பங்கொட்டை கரைசல் பயன்பாடு உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி பேசினார்.
முகாமில் வல்லம் வட்டார தோட்டக்கலை அலுவலர் சபுரா பேகம், துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜ், வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுபாஷ் சந்திரபோஸ், உதவி வேளாண்மை அலுவலர்கள் மஞ்சு, தமிழரசி, அபிராமி, மீனாட்சி, வாசமூர்த்தி, ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
உதவி தொழில்நுட்ப மேலாளர் பாலாஜி நன்றி தெரிவித்தார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.