/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மர்ம விலங்கை பிடிப்பதில் வனத்துறை... அலட்சியம்; விவசாயிகள், பொதுமக்கள் கடும் அதிருப்தி
/
மர்ம விலங்கை பிடிப்பதில் வனத்துறை... அலட்சியம்; விவசாயிகள், பொதுமக்கள் கடும் அதிருப்தி
மர்ம விலங்கை பிடிப்பதில் வனத்துறை... அலட்சியம்; விவசாயிகள், பொதுமக்கள் கடும் அதிருப்தி
மர்ம விலங்கை பிடிப்பதில் வனத்துறை... அலட்சியம்; விவசாயிகள், பொதுமக்கள் கடும் அதிருப்தி
ADDED : ஆக 14, 2025 12:37 AM

செஞ்சி: மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக கால்நடைகளை தாக்கி கொன்று வரும் மர்ம விலங்கை பிடிப்பதில் அலட்சியமாக இருக்கும் வனத்துறை மீது விவசாயிகளும் பொதுமக்களும் அதிருப்தியில் உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார், செஞ்சி, கண்டாச்சிபுரம், திண்டிவனம் தாலுகாவில் கடந்த ஓராண்டில் மர்ம விலங்கு தாக்கியதில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள், 15க்கும் மேற்பட்ட கன்று குட்டிகள், இரண்டு மான்கள், நாய்கள் இறந்துள்ளன.
கடந்த 9ம் தேதி இரவு கொங்கரப்பட்டு கிராமத்தில் 41 ஆடுகளை மர்ம விலங்கு கொன்றது. நேற்று முன்தினம் மீண்டும் கொள்ளார் அருகே குடிசை பாளையத்தில் 5 ஆடுகளை கொன்றது.
வனத்துறையினர் குழப்பம் கால்நடைகள் இறந்த தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு செல்லும் வனத்துறையினர் கேமரா பொருத்துவது, கூண்டு வைப்பது, கால்தடங்களை பதிவு செய்வது என வழக்கமான சடங்கை செய்கின்றனர்.
தாக்குதல் நடத்தும் மர்ம விலங்கு மறுநாள் அந்த இடத்திற்கு வருவதில்லை. இதனால் கேமராவிலும், கூண்டிலும் சிக்க வில்லை.
வனத்துறை எடுத்துள்ள கால் தடங்களில் இரண்டு விலங்கின் கால் தடம் பதிவாகி உள்ளது. அதை கொண்டு எந்த விலங்கு என்பதை உறுதி செய்ய முடியாமல் வனத்துறையினர் நீண்ட குழுப்பத்தில் உள்ளனர். ஆனால் மர்ம விலங்கை பார்த்த விவசாயிகளும், பொது மக்களும் சொல்லும் அடையாளம் கழுதை புலியுடன் ஒத்து போகிறது.
வல்லம், மயிலம் ஒன்றியத்தில் கடந்த இரு மாதங்களாக, மர்ம விலங்கு 15 கி.மீ., சுற்றளவில் மட்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த பகுதியில் காடும் இல்லை. ஆனால் தொண்டியாற்றை ஒட்டி ஏராளமான புதர்கள் உள்ளன. பகல் நேரத்தில் மர்ம விலங்கு இதில் பதுங்கி இருந்து, இரவில் வெளியே வருகிறது. மர்ம விலங்கு தானே வந்து கூண்டில் சிக்கும் என வனத்துறையினர் காத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடவடிக்கை இல்லை இதுவரை வனத்துறையினர் மர்ம விலங்கை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தவில்லை. வால்பாறை, முதுமலை போன்ற வனவிலங்கு அதிகம் உள்ள சரணாலயங்களில் பணிபுரியும் வனவிலங்கை பிடிப்பதில் தேர்ச்சி பெற்ற வன ஊழியர்களை வரவழைத்து, 'டிரோன்' உதவியுடன், பெரிய குழுவாக பகலில் தேடுதல் வேட்டை நடத்தி இருந்தால் மர்ம விலங்கு எப்போதோ பிடிபட்டிருக்கும். வனத்துறை இதுவரை இதற்கான நடவடிக்கையை எடுக்க வில்லை.
பீதியில் விவசாயிகள் தொண்டியாற்றை ஒட்டி உள்ள கொங்கரப்பட்டு, ஆசூர், ரெட்டணை பகுதி மக்கள் மர்ம விலங்கு அவர்களை தாக்க வாய்ப்புள்ளாக கருதி அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.
இதனால் இரவு நேரத்தில் விவசாய நிலங்களில் நீர் பாய்ச்சுவதற்கும் பலருடன் இணைந்து செல்கின்றனர். மேலும் இரவில் தோட்டங்களில் தங்குவதையும் தவிர்த்து வருகின்றனர்.
நிவாரணம் இல்லை இதுவரை இறந்த கால்நடைகள் வனவிலங்கு தாக்குதலில் இறந்தது என்பதை உறுதியாகாமல் இருப்பதால், வனத்துறை விதிகளின் படி எந்த நிவாரணமும் வழங்காமல் உள்ளனர். ஆளும் தரப்பினர் யாரும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் இருப்பதும், எந்த விதமான உதவியும் செய்யாமல் இருப்பதும் பாதிக்கப்பட்டவர்களிடமும், பொது மக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட வன அலுவலர் விசாரணை விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் கார்த்தியாயினி நேற்று கொங்கரப்பட்டு கிராமத்தில், 41 ஆடுகள் இறந்த இடத்தை பார்வையிட்டு, இறந்த ஆடுகளின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினார். தடயங்கள் ஆய்வுக்கு அனுப்பி இருப்பதால் முடிவு வந்ததும் வனவிலங்கு என்பது உறுதியானால் நிவாரணம் வழங்கப்படும் என பாதிக்கப்பட்டவர்களிடம் கூறி உள்ளார்.