/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சம்பளமின்றி தவிக்கும் வன ஊழியர்கள்
/
சம்பளமின்றி தவிக்கும் வன ஊழியர்கள்
ADDED : ஜூன் 24, 2025 07:47 AM
விழுப்புரத்திலிருந்து, கடந்த 2019ம் ஆண்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நீண்ட காலமாக விழுப்புரம் மாவட்டத்திலேயே செயல்பட்டு வந்த வனக்கோட்டம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கள்ளக்குறிச்சி தனி வனக்கோட்டமாக பிரிக்கப்பட்டது.
அதற்கான அலுவலகமும் தனியாக இயங்கி வருகிறது. அதன் கீழ் 150க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தனியாக வனக்கோட்டம் பிரித்த நாளிலிருந்து, கள்ளக்குறிச்சி வன கோட்ட அலுவலர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், 'கள்ளக்குறிச்சி தனி வன கோட்டம் பிரித்து நிர்வாகம் நடக்கிறது. வன அலுவலர், வனக்காப்பாளர், வனவர், வனசரகர், மாவட்ட வன அலுவலர், காவலர்கள் என 150 பேர் வரை பணிபுரிந்து வருகிறோம். அலுவலகம் பிரிக்கப்பட்டது முதல் கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.
இதனால் மாத சம்பளத்தை எதிர்நோக்கியுள் வன அலுவலர்கள், காவலர்கள், கீழ்நிலை ஊழியர்கள் மிகவும் தவித்து வருகிறோம். தனி வன கோட்டம் தாமதமாக பிரிக்கப்பட்ட நிலையில், அதற்கான நிர்வாகப் பணிகளை அலுவலர்கள் சரியாக நியமிக்கவில்லை.
கள்ளக்குறிச்சி வனக்கோட்டத்துக்கான தனி நிர்வாக கணக்குகள் ஏற்படுத்தப்பட்டு, சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது ஊழியர்களாகிய எங்களைத்தான் பாதித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
இது குறித்து, விழுப்புரம் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கள்ளக்குறிச்சி தனி வன கோட்ட அலுவலகம் ஏப்ரல் மாதம்தான் பிரிக்கப்பட்டு, தனி டிவிஷனாக இயங்குகிறது. அந்த வன அலுவலகத்துக்கு தனி நிர்வாக கோடு, புது டிவிஷனுக்கான நிர்வாக ஆவணங்கள் தயாரிக்கும் பணிகள் நடந்துள்ளது. வரும் மாதத்திலிருந்து தனி நிர்வாகம் செயல்பட்டு, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்' என்றனர்.