/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய வழித்தடத்தில் அரசு பஸ் சேவை துவக்கம்
/
புதிய வழித்தடத்தில் அரசு பஸ் சேவை துவக்கம்
ADDED : அக் 08, 2025 12:24 AM

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லூர் அரசு கலைக்கல்லுாரியிலிருந்து, 3 புதிய வழித்தடத்தில் அரசு பஸ் சேவையை, பொன்முடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அரசு கலைக்கல்லூரிக்கு விழுப்புரம், அரசூர், ஆனத்துார், பிடாகம், ஏனாதிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து கல்லுாரிக்கு மாணவர்கள் வந்து செல்கின்றனர்.
போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தால், சின்னசெவலை பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 2 கி.மீ., துாரம் நடந்து சென்று மாணவர்கள் கல்லுாரிக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இதையடுத்து கல்லூரி மாணவர்கள் நேரடி பஸ் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் கல்லுாரியில் இருந்து விழுப்புரம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டைக்கு புதிய வழித்தடத்தில் மொத்தம், 3 புதிய அரசு பஸ் சேவையை, பொன்முடி எம்.எல்.ஏ., கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் தி.மு.க.,வை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி, ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் ஓம் சிவ சக்திவேல், நகர செயலாளர் கணேசன், ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் கைரா சடகோபன், மோகன்ராஜ், ஒன்றிய விவசாய அணி பொறுப்பாளர் வெங்கடேசன், தலைமை பேச்சாளர் பரசுராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் விழுப்புரம் போக்குவரத்து துறை பொது மேலாளர் ஜெய்சங்கர், உதவி மேலாளர் சிவராமன் கிளை மேலாளர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.