/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அறிவியல் இயக்க திறனறிதல் தேர்வில் ஆர்வம்! மாவட்டத்தில் 1,643 மாணவர்கள் பங்கேற்பு
/
அறிவியல் இயக்க திறனறிதல் தேர்வில் ஆர்வம்! மாவட்டத்தில் 1,643 மாணவர்கள் பங்கேற்பு
அறிவியல் இயக்க திறனறிதல் தேர்வில் ஆர்வம்! மாவட்டத்தில் 1,643 மாணவர்கள் பங்கேற்பு
அறிவியல் இயக்க திறனறிதல் தேர்வில் ஆர்வம்! மாவட்டத்தில் 1,643 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 21, 2024 10:33 PM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நேற்று 53 மையங்களில் நடந்த மாநில அளவிலான துளிர் திறனறிதல் தேர்வில் 1,643 மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், பள்ளி மாணவர்களிடம் அறிவியல் சிந்தனை, அறிவியல் மனப்பான்மை மற்றும் பொது அறிவை வளர்க்கும் வகையிலான துளிர் திறனறிதல் தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அறிவியல் மற்றும் பொது அறிவு தொடர்பான வினாக்கள், இத்தேர்வில் இடம் பெறும். இந்த தேர்வு 2 மணி நேரம் நடைபெறும்.
அதன்படி, இந்தாண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று தேர்வு நடந்தது. இந்த தேர்வை 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் 1,643 மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். 6 முதல் 8ம் வகுப்பு வரை 1,317 மாணவர்களும், 9 முதல் 10ம் வகுப்பு வரை 297 மாணவர்களும், பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 29 மாணவர்களும் தேர்வினை எழுதினர். மாவட்டத்தில் மொத்தம் 11 ஒன்றியங்களில், 55 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
நிறைவாக தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், மாநில அளவிலான தேர்வில் பங்கேற்றமைக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், ஓராண்டுக்கான துளிர் மாத இதழும் அறிவியல் இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது.
இந்த துளிர் திறனறிதல் தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெறும் மாணவர்கள், மாநில அளவிலான அறிவியல் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுவர். அறிவியல் அறிஞர்களை சந்திப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
மரக்காணம் அடுத்த கட்டளை ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற துளிர் திறனறிதல் தேர்வை, மரக்காணம் பயிற்சி வட்டார கல்வி அலுவலர்கள் அனுமந்தன், கண்ணதாசன், ஆசிரியர் பயிற்றுனர் சசிரேகா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், இத்தேர்வை துளிர் திறனறிதல் தேர்வுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சுகதேவ் மற்றும் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மற்றும் வானவில் மன்ற கருத்தாளர்கள் ஒருங்கிணைத்தனர். மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.