/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இருளர் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
/
இருளர் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 06:46 AM
விழுப்புரம்: இருளர் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
செஞ்சி அடுத்த மணலப்பாடி மதுரா பூந்தமல்லியைச் சேர்ந்தவர் 'சாமந்தி இருளர் மகளிர் சுய உதவிக்குழு'வினர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் 30க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் குடும்பங்கள் உள்ளன. இக்குடும்பங்களிலிருந்து 5 ஆண்டுகளாக சாமந்தி இருளர் பெண்கள் சுய உதவிக்குழு செயல்பட்டு வருகிறது.
இக்குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு கடந்த 2023ம் ஆண்டு அக்ஸ்ட் மாதம் ஆலம்பூண்டி தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 9 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது.
மணலப்பாடி ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு அரசு பணியாளராக செயல்பட்ட பெண் ஒருவர் மூலம் கடன் பெற்றுத்தரப்பட்டது.
இந்த தொகையில் இருந்து 3.50 லட்சம் ரூபாயை அந்த பெண் எடுத்துக்கொண்டார். மீதமிருந்த பணத்தை எங்கள் குழுவிற்கு பிரித்து கொடுத்தார். மாதம் 33 ஆயிரம் ரூபாய் வீதம் 11 மாதங்கள் நாங்கள் அந்த தொகையை அந்த பெண்ணிடம் திருப்பி செலுத்தி விட்டோம்.
ஆனால், வங்கி மேலாளர், குழு பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு கடன் தொகை 9 லட்சத்தை திருப்பி செலுத்தவில்லை என கூறினார்.
அந்த பெண்ணிடம் கேட்டபோது, சில மாதங்களில் கட்டிவிடுவதாக கூறிவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனால், எங்களுக்கு வங்கியில் இருந்து அழுத்தம் கொடுக்கின்றனர்.
எனவே, இக்குழு பிரச்னையில் கலெக்டர் தலையிட்டு தலைமறைவான பெண் ஏமாற்றிய பணத்தை வங்கியில் செலுத்தவும், அந்த வங்கி கடனை தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து, போலீசார் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

