/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? கிராம மக்கள் அச்சம் : வனத்துறையினர் ஆய்வு
/
விழுப்புரம் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? கிராம மக்கள் அச்சம் : வனத்துறையினர் ஆய்வு
விழுப்புரம் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? கிராம மக்கள் அச்சம் : வனத்துறையினர் ஆய்வு
விழுப்புரம் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? கிராம மக்கள் அச்சம் : வனத்துறையினர் ஆய்வு
ADDED : நவ 22, 2025 07:28 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி டோல்கேட் அருகே கடந்த மாதம் சிறுத்தை மர்மமாக இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விழுப்புரம் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் அறியப்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம், கோலியனுார் அடுத்த சகாதேவன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ், 70; வனத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற டிரைவர். இவர், முருகர்கோவில் தெருவில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
நேற்று காலை 9:45 மணிக்கு, வீட்டின் வெளியே சத்தம் கேட்டதால், ஜன்னல் வழியாக பார்த்தபோது, ஒரு சிறுத்தை பக்கத்து வீட்டின் ஓரமாக இருந்த சுவரைத் தாண்டி குதித்து ஓடியுள்ளது. உடனே அவர், விழுப்புரம் வனத்துறை அலுவலகம், கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதற்குள் கிராம மக்கள் திரண்டு, கிராமம் முழுவதும் வீடுகள், தோட்டங்களில் அச்சத்துடன் தேடினர். விழுப்புரம் வன அலுவலர் குணசேகரன் மற்றும் குழுவினர் விரைந்து வந்து, சகாதேவன்பேட்டை கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிறுத்தையை பார்த்ததாக கூறிய முதியவர் சிவராஜ் மற்றும் பொது மக்களிடம் அவர்கள் விசாரித்தனர்.
அப்போது சிவராஜ் கூறுகையில், 'காலை 9:45 மணிக்கு வீட்டிலிருந்தபோது, பக்கத்து வீட்டு சந்தில் இருந்த வைக்கோல் கட்டின் மீது ஏறி, சுவற்றை தாண்டி குதித்து சாம்பல் நிற சிறுத்தை கடந்து சென்றது. உடல் முழுவதும் கருப்பு புள்ளியும், நீண்ட வாலுடன் சிறுத்தை காணப்பட்டது. 3 அடி உயரம், 4 அடி நீளம் இருந்தது.பின்பக்க வீட்டின் தோட்டத்தை கடந்து வேகமாக சென்றுவிட்டது என்றார்.
ஓய்வு பெற்ற வன ஊழியர் மட்டுமே சிறுத்தையை பார்த்ததாக உறுதியாக குறிப்பிட்டார். ஆனால், கிராமத்தினர் ஒருவரும் பார்க்கவில்லை, அவர் கூறிய நேரத்தில் பக்கத்து தெரு பகுதியில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது என தெரிவித்தனர்.பட்டப்பகலில் சிறுத்தை நடமாட்டம் என்ற தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக, கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, வனவர் குணசேகரன் தலைமையிலான குழுவினர், குடியிருப்பு பகுதிகள், சாலை, கரும்பு தோட்டம், வயல் வெளி பகுதிகளுக்கு சென்று பார்த்தனர். சிறுத்தை நடந்து சென்றதாக கூறிய இடத்தில், கால் தடங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்தனர். இருப்பினும் சிறுத்தை வந்ததற்கான தடயங்கள் ஏதும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
மேலும், கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால், கிராமத்தினர் கவனமாக இருக்க வேண்டும், மாலை, இரவு நேரங்களில் வெளியே, வயல் வெளி பகுதிக்கு தனியாக செல்லவேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரித்து சென்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், ஏற்கனவே விக்கிரவாண்டி டோல் கேட் அருகே சிறுத்தை இறந்து கிடந்ததன் மர்மம் விலகாத நிலையில், மீண்டும் விழுப்புரம் அருகே பட்டப்பகலில், சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதாக எழுந்த தகவல் கிராம மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

