ADDED : நவ 02, 2025 11:40 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் மத்திய அரசின் மை பாரத் அமைப்பு சார்பில் தேசிய ஒற்றுமை தின ஊர்வலம் நடந்தது.
சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளையொட்டி, தேசிய ஒற்றுமை நடை பயண ஊர்வலம் நடந்தது. விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் துவங்கிய ஊர்வலத்திற்கு, அரசு கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அருணாசலம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் தர்மராஜன், அன்னியூர் அரசு கல்லுாரி முதல்வர் அசோகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். விழுப்புரம் மை பாரத் அமைப்பின் அலுவலர்கள் காந்தி, சுந்தர், இளைஞர் தன்னார்வலர்கள் சுதாகர், சிலம்பரசன், பிரதாப் முன்னிலை வகித்தனர். ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபுசெல்வதுரை, அன்னை சமூக கல்லுாரி உதவி பொதுமேலாளர் பிரபாகரன், அன்னை தெரசா பாரா மெடிக்கல் கல்லுாரி திருமால், அருவி அறக்கட்டளை விஜிகாந்தி, மல்லர் கம்பம் பயிற்றுனர் செல்வமொழியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இதனையடுத்து, பெருந்திட்ட வளாகத்திலிருந்து தேசிய கொடியுடன் திரண்ட ஊர்வலத்தில் பல்வேறு பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், இளையோர் நற்பணி மன்றத்தினர்கள், என்.சி.சி., ஜெ.ஆர்.சி., மாணவ, மாணவிகள் என 500 பேர் பங்கேற்றனர். ஊர்வலம், திருச்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, குழந்தைவேல் நகர் சாலை வழியாக 5 கி.மீ., தொலைவில் சென்று, மீண்டும் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தை அடைந்தது.
ஊர்வலத்தில், சர்தார் வல்லபாய் படேலின் தேச ஒற்றுமை கருத்துகளையும், போதை பொருள் இல்லாத இந்தியா, தேச ஒற்றுமையை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.

