ஏரி பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அவசியம்! பருவமழைக்குள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஏரி பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அவசியம்! பருவமழைக்குள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
UPDATED : ஜூலை 20, 2026 06:52 PM
ADDED : ஜூலை 20, 2026 06:50 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 230க்கும் மேற்பட்ட ஏரிகளை தனி நபர்கள் பலர் ஆக்கிரமித்துள்ளதால் விளை நிலங்களின் பாசனத்திற்கு நீர் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை விரைவாக மீட்க பொதுப்பணி துறை (நீர்வளம்) அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் விவசாயத்தை பிரதான தொழிலாக விவசாயிகள் செய்து வருகின்றனர். இங்குள்ள விளை நிலங்களில் நெல், வேர்க்கடலை, கரும்பு, மக்காசோளம் உட்பட பல்வேறு தோட்டக்கலைத் துறை பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த விளை நிலங்களுக்கு நீர் பாசனம் நிலத்தடி நீர்மட்டம் மூலமும், ஏரி கால்வாய்கள் மூலமும் தண்ணீர் பாசனம் பெற்று விவசாயிகள் தங்களின் பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.
மாவட்டத்தில் 624 ஏரிகள் பொதுப்பணிதுறை (நீர்வளம்) கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இதில், விழுப்புரத்தில் 506 ஏரிகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 118 ஏரிகளும் உள்ளது.
இந்த ஏரிகளில், விழுப்புரத்தில் 70க்கும் மேற்பட்ட ஏரிகளும், செஞ்சியில் 55 ஏரிகள், திண்டிவனத்தில் 30க்கும் மேற்பட்ட ஏரிகள் உட்பட 250க்கும் மேற்பட்ட ஏரிகளில் நீர்வரத்து வாய்க்கால்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்புகளை மீட்க பொதுப்பணிதுறை (நீர்வளம்) அதிகாரிகள் அடிக்கடி நடவடிக்கை எடுத்தும் மொத்தமாக மீட்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்தோருக்கு, முறையாக அலுவலகம் மூலம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நோட்டீசை பெற்றும் அவர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் நாங்கள் உரிய நாளில் சென்று அந்த ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்.
இதற்கான போதிய நிதி ஆதாரங்கள் தனியாக அரசு மூலம் எங்களுக்கு வழங்குவதில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளுக்கு ஆகும் செலவினங்களை அதிகாரிகளின் சொந்த செலவிலே செய்ய வேண்டிய நிலையுள்ளது.
இதனால், ஏரிகளின் ஆக்கிரமிப்பை மீட்கும் பணிகள் தொய்வாக நடக்கிறது. விரைவில் பருவமழை துவங்குவதற்குள் ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில் ஏரிகளின் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக விவசாயிகள் பங்கேற்கும் குறைகேட்பு கூட்டங்களில் புகாராக தெரிவித்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை இந்தாண்டு குறைவாகவே இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தரப்பில் கூறியுள்ள நிலையில், வரும் தண்ணீரையாவது ஏரிகளில் சேமித்து அதை பாசன வாய்க்கால்கள் மூலம் விவசாயத்திற்கு கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இனியும், காலம் கடத்தாமல் அதிகாரிகள், ஏரிகளில் நீர்வரத்து செல்லும் வாய்கால்களை ஆக்கிரமிப்பு செய்தோரிடம் இருந்து மீட்பதற்கான துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
