/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரியில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை! கோலியனுாரில் மூன்று கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு
/
ஏரியில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை! கோலியனுாரில் மூன்று கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு
ஏரியில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை! கோலியனுாரில் மூன்று கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு
ஏரியில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை! கோலியனுாரில் மூன்று கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு
ADDED : நவ 06, 2025 05:10 AM

விழுப்புரம் அருகே 65 ஏக்கர் பரப்புள்ள கோலியனுார் ஏரி விவசாய பாசனத்திற்கும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. நீண்டகால ஆக்கிரமிப்பிலிருந்த இந்த ஏரியை, விவசாயிகள், தன்னார்வர் குழுவினர் மீட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சீரமைத்தனர். இதனால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், இந்த ஏரிக்கு விழுப்புரம் வழியாக வரும் கோலியனுாரான் வாய்க்காலில், நகரின் கழிவுநீர் கலந்து வருவதால், ஏரி நீர் மாசடைந்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கோலியனுார் கிராமத்தினர், கடந்த மாதம் திரண்டு வந்து, ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என சாலை மறியல் செய்ய முயன்றனர். வளவனுார் போலீசார், விழுப்புரம் நகராட்சி அதிகாரிகள் வந்து, கழிவுநீர் வருவது தடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
ஆனால், தொடர்ந்து, விழுப்புரம் நகர கழிவுநீர் கோலியனுார் ஏரிக்கு வந்து நிரம்பி வருவதால், பாதிக்கப்பட்ட கோலியனுார், சாலைஅகரம், அனிச்சம்பாளையம் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள், அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் திரண்டு வந்து, நேற்று காலை 10:30 மணிக்கு கோலியனுார் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் மாசடைந்து மஞ்சள் நிறத்தில் இருப்பதை பாட்டிலில் எடுத்து வந்து காண்பித்து, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
விழுப்புரம் நகராட்சி கமிஷனர் வசந்தி, கோலியனுார் பி.டி.ஓ., ஜெகநாதன், டி.எஸ்.பி., சரவணன் உள்ளிட்டோர் வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்கள்கூறியதாவது: கோலியனுார் ஏரியை துார்வாரி சீரமைத்துள்ளோம். ஆனால், விழுப்புரம் பாதாள சாக்கடை கழிவுநீர், காகுப்பம், எருமனந்தாங்கல் வழியாக நேரடியாக கோலியனுார் ஏரிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. அதனை நிறுத்த வேண்டும் என கூறி, நாங்கள் அதற்கான வாய்க்காலை அடைத்துவிட்டோம்.
ஆனால், நகர பகுதியில் கழிவுநீர் வழிந்து செல்வதால், மீண்டும் தடுப்பை உடைத்துஏரிக்கு கழிவுநீர் திறந்துவிட்டுள்ளனர். தொடர்ச்சியாக சாக்கடை கழிவுநீர் வருவதால், ஏரி நீர் மாசடைந்துள்ளதோடு, கோலியனுார் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீரும் பாதித்து, மஞ்சள் நிறமாக நுரைத்த நிலையில் வருகிறது.
இதனால், நோய் பாதிப்பும் தொடர்ந்துள்ளது. விவசாயத்திற்கும் பாசன நீர் பாதித்துள்ளது. பானாம்பட்டு பகுதி கழிவுநீரும் இந்த வாய்க்காலில் தான் திறந்து விடப்படுகிறது. கழிவுநீர் கலப்பால், கோலியனுார், அனிச்சம்பாளையம், சாலைஅகரம் மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். முதல்வர், கலெக்டர், நகராட்சியில் புகாரளித்தும் நடவடிக்கையில்லை.
பாதாள சாக்கடை கழிவுநீர் வருவதை உடனே நிறுத்த வேண்டும் என்றனர். அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, விழுப்புரம் நகராட்சி கமிஷனர் , பி.டி.ஓ., டி.எஸ்.பி., தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. நகராட்சி தரப்பில், கழிவுநீர் சுத்திகரித்து அனுப்பும் பிளாண்ட் 3 மாதங்களில் புதுப்பிக்கப்படும். அதுவரை, கழிவுநீர் மாற்று வாய்க்கால்களில் திருப்பிவிடப்படும். பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாணப்படும் என உறுதியளித்தனர். அதனையேற்று மதியம் 1:00 மணிக்கு, மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.

