/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழை பாதித்த மாவட்டங்களில் பல இடங்களில் மக்கள் மறியல்
/
மழை பாதித்த மாவட்டங்களில் பல இடங்களில் மக்கள் மறியல்
மழை பாதித்த மாவட்டங்களில் பல இடங்களில் மக்கள் மறியல்
மழை பாதித்த மாவட்டங்களில் பல இடங்களில் மக்கள் மறியல்
ADDED : டிச 05, 2024 04:42 AM

திருவெண்ணெய்நல்லுார் : விழுப்புரம் மாவட்டத்தில், 'பெஞ்சல்' புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள், மீட்புப் பணி மற்றும் நிவாரண உதவிகள் கிடைக்காததால் ஆவேசமடைந்தனர். அரசைக் கண்டித்து, பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதித்தது.
ஏமப்பூர் மற்றும் திருவெண்ணெய்நல்லுார் ஜீவா நகர் மக்கள் 500க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 8:15 மணிக்கு, திருவெண்ணெய்நல்லுார் - திருக்கோவிலுார் பிரதான சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். அங்கிருந்த தி.மு.க., பேனரை கிழித்து சாலையில் வீசினர்.
கலெக்டர் பழனி அளித்த உறுதிமொழியை அடுத்து, மறியலை கைவிட்டனர்.
விழுப்புரம் அருகே தி.மேட்டுப்பாளையம், முத்தியால்பேட்டை பகுதிகளில் பல வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை விழுப்புரம் - செஞ்சி சாலையில் மறியல் செய்தனர்.
அங்கு வந்த விக்கிரவாண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., சிவா அளித்த உறுதிமொழியை ஏற்று, மறியலை கைவிட்டு கலைந்தனர்.
விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் கிராமத்தில் நான்கு நாட்களாகியும் மழைநீர் வடியாததாலும், துண்டிக்கப்பட்ட மின்சாரம் வராததாலும், ஆத்திரமடைந்த பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 10.15 மணிக்கு விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுக்குப் பின், 11:15 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.
அதுபோல, கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்துார் ஊராட்சி பொன்னங்குப்பம் கிராமத்தில் புதுப்பேட்டை- அரசூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் அளித்த உறுதியை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.