/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் திட்டத்திலும் ' அரசியல்' தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காமல் திண்டாட்டம்
/
விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் திட்டத்திலும் ' அரசியல்' தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காமல் திண்டாட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் திட்டத்திலும் ' அரசியல்' தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காமல் திண்டாட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் திட்டத்திலும் ' அரசியல்' தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காமல் திண்டாட்டம்
ADDED : செப் 23, 2025 07:37 AM
வி ழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதில், அரசியல் காரணங்களால் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நிலத்தடி நீர் மிகவும் குறைந்த மாவட்டங்களில், விழுப்புரமும் ஒன்று. திண்டிவனம், வானுார், விக்கிரவாண்டி தொகுதிகள் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளாக உள்ளன.
இப்பிரச்னை குறித்து, கடந்த 2019ம் ஆண்டு வி.சி., எம்.பி.,க்கள் ரவிக்குமார், திருமாவளவன் ஆகியோர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்படும் என்பதால், அப்போதைய முதல்வர் பழனிசாமி, அமைச்சராக இருந்த சண்முகம் ஆகியோர் துரித நடவடிக்கை எடுத்தனர்.
அதற்கான இடத்தைத் தேர்வு செய்ததோடு, டெண்டரும் விட்டது. தொடர்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., அரசு அமைந்தததும், அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக, காவிரி நீரை ஆதாரமாகக் கொண்ட திருவண்ணாமலை கூட்டுக் குடிநீர்த் திட்டம் தயாரிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 1,565 ஊரக குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது.
இதற்காக 3,310 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பில், நிதி பற்றாக்குறை காரணமாக அதனை செயல்படுத்த முடியாது என கைவிரித்துவிட்டது.
தி.மு.க., அரசு சமர்ப்பித்த திட்டம் என்பதால் மத்திய பா.ஜ., அரசு பாரபட்சம் காட்டுவதாக வி.சி., கட்சி தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வி.சி., கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம். பி., வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு, அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை, அடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு, ரத்து செய்தது ஏன் என அ.தி.மு.க., நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர். அரசியல் கட்சிகளிடையே நிலவும் போட்டா போட்டி காரணமாக, குடிநீர் பிரச்னை இழுபறியாக நீடிப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.