/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழை, வெள்ள பாதிப்பால் மக்கள் ஆவேசம் மீட்பு பணி நடக்காததால் விழுப்புரத்தில் போராட்டம்
/
மழை, வெள்ள பாதிப்பால் மக்கள் ஆவேசம் மீட்பு பணி நடக்காததால் விழுப்புரத்தில் போராட்டம்
மழை, வெள்ள பாதிப்பால் மக்கள் ஆவேசம் மீட்பு பணி நடக்காததால் விழுப்புரத்தில் போராட்டம்
மழை, வெள்ள பாதிப்பால் மக்கள் ஆவேசம் மீட்பு பணி நடக்காததால் விழுப்புரத்தில் போராட்டம்
ADDED : டிச 04, 2024 08:38 AM
விழுப்புரம் : 'பெஞ்சல்' புயல், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மந்தகதியில் நடப்பதை கண்டித்து, மக்கள் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
'பெஞ்சல்' புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 51 செ.மீ., மழை கொட்டியது. இதனால், மாவட்டத்தில் உள்ள 505 ஏரிகளில் 437 ஏரிகள் நிரம்பியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
சாத்தனுார் மற்றும் வீடூர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், தென்பெண்ணை மற்றும் சங்கராபரணி ஆறுகளின் கரையோர கிராமங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
மக்கள் கொந்தளிப்பு
மழை வெள்ளத்தில், மாவட்டத்தில் 168 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட 5,674 பேர் 88 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சரிவர வழங்கவில்லை.
மழை விட்டு 3 நாட்களாகியும், குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த நீர் வெளியேற்றப்படவில்லை. மழை, வெள்ளம் பாதித்த பல பகுதிகளை அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை.
இதனால் கொந்தளித்த மக்கள், மாவட்டத்தில் பல இடங்களில், அரசை கண்டித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல இடங்களில் மறியல்
விழுப்புரம் அடுத்த இருவேல்பட்டு மற்றும் அரசூர் கிராம மக்கள் விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 இடங்களில் மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அடுத்த அயினம்பாளையம், கொய்யாத்தோப்பு கிராம மக்கள் நேற்று காலை 11:30 மணிக்கு திருவண்ணாமலை - செஞ்சி சாலையில் மரங்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்த வந்த சிவா எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
பெரிய செவலை கிராம மக்கள், கடலுார் - சித்துார் சாலையில் ஒரு மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர்.
வி.சாத்தனுார் கிராம மக்கள், விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி டோல்கேட்டில் மறியலில் ஈடுபட்டதால் 30 நிமிடம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.