/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிகாரிகளை கண்டித்து 3 மணி நேரம் சாலை மறியல்
/
அதிகாரிகளை கண்டித்து 3 மணி நேரம் சாலை மறியல்
ADDED : டிச 04, 2024 07:57 AM

திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லுார் அருகே, கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அதிகாரிகள் வராததை கண்டித்து, தேசிய நெடுஞ்சாலையில் இரு இடங்களில் பொது மக்கள் 3 மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு வந்த அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசி எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் நிலவியது.
விழுப்புரம் மாவட்டத்தில் 'பெஞ்சல்' புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்ததால் சாத்தனுார் அணை நிரம்பியது.
அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால், திருவெண்ணெய்நல்லுார் தாலுகாவிற்கு உட்பட்ட மலட்டாறு கரையோரத்தில் உள்ள டி.எடையார், தொட்டிக்குடிசை, சின்ன செவலை, கண்ணாரம்பட்டு, தென்மங்கலம், இருவேல்பட்டு, அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது.
இதில் சில வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. சில வீடுகள் மண்ணரிப்பில் இடிந்து விழுந்து தரைமட்டமானது, விளைநிலங்கள் மூழ்கின.
கால்நடைகள் தண்ணீரில் அடித்துச் சென்றன. குறிப்பாக, இருவேல்பட்டு ஆற்றுத் தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகளும், அரசூர் கூட்ரோடு மற்றும் பாரதி நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளும் நீரில் மூழ்கி அதிகளவில் பாதிக்கப்பட்டன. மக்கள் வாழ்வாதாரத்தையும், இயல்பு வாழ்க்கையும் இழந்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு அதிகாரிகள் நேரில் வந்து பார்க்காமலும், நிவாரணம் வழங்காமலும் மெத்தனமாக இருப்பதாக மக்கள் ஆத்திரமடைந்தனர்.
இதனை கண்டித்து, இருவேல்பட்டு கிராம மக்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பஸ் நிறுத்தத்திலும், அரசூர், ஆனத்துார், தணியாலம்பட்டு, தென்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் அரசூர் கூட்ரோடு பகுதிகளிலும் நேற்று காலை 8:00 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து 8:50 மணியளவில் வந்த ஏ.எஸ்.பி., ரவீந்திர குப்தா, மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். பொதுமக்கள், 'கலெக்டர் நேரில் வர வேண்டும்' என பிடிவாதம் பிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து, 9:30 மணியளவில் வனத்துறை அமைச்சர் பொன்முடி, கலெக்டர் பழனி, எஸ்.பி., ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அப்போது, அமைச்சர் பொன்முடி காரில் அமர்ந்தபடியே மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், 'இரண்டு நாட்களாக வரவில்லை. இப்போது ஏன் வருகிறீர்கள்' என ஆவேசமாக கேள்வி எழுப்பி, அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி வீசினர்.
இதனால், அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து காரில் இருந்து கீழே இறங்கிய அமைச்சர், அப்பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளை மட்டும் பார்வையிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பிச் சென்றார்.
தொடர்ந்து, கலெக்டர் பழனி, எஸ்.பி., ஆகியோர் அரசூர் கூட்ரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று 11:15 மணியளவில் மக்கள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதனால், 5 கி.மீ., துாரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.