/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
/
திண்டிவனம் தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
திண்டிவனம் தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
திண்டிவனம் தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
UPDATED : பிப் 07, 2026 07:14 AM
ADDED : பிப் 07, 2026 04:47 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் 66 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு முதல்வரால் திறப்பு விழா கண்ட மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தேவையான டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டிவனத்தில் இருந்த அரசு மருத்துவமனை, அரசு உத்தரவின் பேரில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்ப்பட்டது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தேசிய நல்வாழ்வு குழுமத்தின் சார்பில் 66 கோடி ரூபாய் செலவில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்கான பணிகள் கடந்த 22-23ம் ஆண்டு துவங்கியது. இதற்காக மருத்துவனையில் இருந்த பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, புதியதாக கட்டப்பட்டது.
முதல் பிளாக்கில், ஐந்து மாடிகள் கொண்ட கட்டடங்கள் கட்டப்பட்டது. இந்த பிளாக்கில் அவசர சிகிச்சை பகுதி, அவசர கால ஆப்பரேஷன் தியேட்டர், மருந்தகம், பேரிடர் மேலாண்மை பகுதி, உள் மற்றும் வெளிநோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு, ஸ்கேன், எக்ஸ்ரே, குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு, பெண்கள் மருத்துவ பிரிவு, தீவிபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பிரிவு உள்ளது.
மற்றொரு பிளாக்கில் உள்ள தாய் சேய் நலப் பிரிவில் தரை தளத்துடன், நான்கு மாடி கொண்ட கட்டத்தில், மகப்பேறு அவசரப்பிரிவு, குழந்தைகள் வெளிப்புற மருத்துவ பயனாளர் பிரிவு, தடுப்பூசி அறை, ஸ்கேன் பிரிவு, பிரசவபிரிவு, ஆப்பரேஷன் தியேட்டர், பச்சிளங் குழந்தை பராமரிப்பு பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட பிரிவு உள்ளிட்ட பல சிகிச்சை பிரிவுகள் உள்ளது.
மாவட்ட தலைமை மருத்துவமனை திறப்பு விழாவிற்கு முன் ஆய்வு செய்த கலெக்டர், மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர், திறப்பு விழாவிற்கு முன், மாவட்ட தலைமை மருத்துவனைக்கு கூடுதலாக டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
ஆனால், கடந்த 4ம் தேதி மாவட்ட தலைமை மருத்துவமனை திறக்கப்பட்ட பிறகும் இதுவரை கூடுதல் மருத்துவ பணியாளர்கள், டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை.
தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே பணியில் இருந்த 22 டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் உள்ளனர். புதிய மருத்துவமனையில் 350 படுக்கை வசதிகள் உள்ளது.
இதுமட்டுமல்லாமல் இரண்டு மருத்துவ பிளாக் கட்டடத்தில் 30க்கு மேற்பட்ட மருத்துவ பிரிவுகள் கொண்டுள்ளது.
இவை எல்லாவற்றிற்கும் கூடுதலாக 45 டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், டெக்னிஷியன் உள்ளிட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது.
இவ்வாறு நியமித்தால்தான், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க முடியும்.
இருக்கிற டாக்டர்களை வைத்துக்கொண்டு நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படும்.
புதிய மருத்துவனையில் யூராலஜி இருதய நோய் பிரிவு, தோல் வியாதிக்கான மருத்துவம் உள்ளிட்ட பிரதான பிரிவிற்கு டாக்டர்கள் இல்லை. இது இல்லாமல், இறந்தவர்களின் உடலை பிரதே பரிசோதனை செய்வற்கு போதுமான மருத்துவர்கள் இல்லாததால், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமைனக்கு அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் பகுதி முக்கியமான இடத்தில் உள்ளது. அதிக அளவில் விபத்து நடக்கும் பகுதி என்பதால், விபத்தில் சிக்கியவர்களுக்கு தரமான சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமையாகும்.
பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, திண்டிவனத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தேவையான டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ டெக்னிஷியன் உள்ளிட்டவைகளை போர்க்கால அடிப்படையில் நியமிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

