/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் சிறுமதுரை அரசு உயர்நிலைப் பள்ளி
/
மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் சிறுமதுரை அரசு உயர்நிலைப் பள்ளி
மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் சிறுமதுரை அரசு உயர்நிலைப் பள்ளி
மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் சிறுமதுரை அரசு உயர்நிலைப் பள்ளி
ADDED : நவ 02, 2025 03:38 AM

சிறுமதுரை அரசு உயர்நிலை பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியில் தலைமையாசிரியர் செயல்பட்டு வருகிறார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சிறுமதுரை கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 227 மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும், கல்வியில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் இருந்து வந்து பயில்கின்றனர்.
இதில், பெரும்பாலானோர் தாய், அல்லது தந்தையை இழந்தவர்களாகவே உள்ளனர். சிலரின் பெற்றோர் இருவரும் வெளியூரில் கூலித் தொழில் செய்பவர்களாக உள்ளனர்.
இதுபோன்ற மாணவ, மாணவியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 'கல்வி தான் வாழ்வின் மூலதனம்' என அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை வழங்கும் நோக்கில், தலைமையாசிரியர் தலைமையில் அனைத்து ஆசிரியர்களின் கூட்டு முயற்சியோடு சிறந்த அரசு பள்ளியாக உருவாகி வருகிறது.
இந்த பள்ளியில் தனி நுாலகம், கணினி ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை, ஆங்கில திறனை மேம்படுத்த வகுப்பு, மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த விளையாட்டு விழா, பள்ளியில் செஞ்சிலுவை சங்கம், சாரண, சாரணியர் இயக்கம், பசுமைப்படை இயக்கம் மூலம் மாணவர்களின் சமூக அக்கறையை மேம்படுத்தும் நோக்கில் சிறுமதுரை அரசு உயர்நிலை பள்ளி செயல்படுகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு இந்த பள்ளியில் மாணவர்களை தயார் செய்வதற்காக, காலை, மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
மேலும், பள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம் அமைத்து பராமரிக்கப்பட்டு, அதன் மூலம் விளையும் காய்கறிகளை மாணவர்களின் மத்திய சத்துணவோடு கூடுதலாக வழங்கப்படுகிறது.
தனியார் பள்ளிகளுக்கு இணையான சுகாதாரமான பள்ளி வளாகம், துாய்மையான குடிநீர், கழிவறைகள், காற்றோட்டமான வகுப்பறை, தனி நுாலகம், கணினி ஆய்வகம் உள்ளது.
பள்ளியின் தலைமையாசிரியராக (பொறுப்பு) அருண்பிரகாஷ் பணிபுரிகிறார். இவர், கடந்த 2011ம் ஆண்டு, பொன்னியேந்தல் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பொறுப்பேற்று, பின் விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்தார். தொடர்ந்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்து, தற்போது சிறுமதுரை அரசு உயர்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பணிபுரிகிறார்.
இவர், பணியேற்ற நாளிலிருந்து மாணவர்களின் கல்வி, சமூக நலனில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து சிறந்த சமூக மாற்றத்தை கல்வியால் மட்டுமே ஏற்படுத்த முடியம் என் உன்னத நோக்கில் பணிபுரிந்து வருகிறார்.
இவர், காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த போது, பணி முடிந்த பின் மாலை நேரங்களில் 600க்கும் மேற்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று பெற்றோர்களை சந்தித்து, அந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
மேலும், இவர், சிறுமதுரை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்க சிறந்த சூழலை ஏற்படுத்தும் நோக்கில், வகுப்பறை சுவர்களில் வண்ணம் தீட்டி மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் சிறந்த வாசகங்கள், ஓவியங்களை தீட்டியுள்ளார்.
மேலும், இவர், மாணவர்களுக்குள் தோழமையை ஏற்படுத்தி, உணர்வுக்கு மதிப்பு அளிக்கும் விதமாக அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறார்.
இந்த பள்ளி அரசு பள்ளிகளுக்கும் ஒரு முன்மாதிரி பள்ளியாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.

