/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தளவனுார் அணைக்கட்டு கரை மீண்டும்... உடைப்பு; 50 வீடுகள் பாதிப்பு: பொதுமக்கள் ஆவேசம்
/
தளவனுார் அணைக்கட்டு கரை மீண்டும்... உடைப்பு; 50 வீடுகள் பாதிப்பு: பொதுமக்கள் ஆவேசம்
தளவனுார் அணைக்கட்டு கரை மீண்டும்... உடைப்பு; 50 வீடுகள் பாதிப்பு: பொதுமக்கள் ஆவேசம்
தளவனுார் அணைக்கட்டு கரை மீண்டும்... உடைப்பு; 50 வீடுகள் பாதிப்பு: பொதுமக்கள் ஆவேசம்
ADDED : டிச 04, 2024 08:06 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உடைந்து கிடக்கும் தளவனுார் அணைக்கட்டு கரை மீண்டும் உடைப்பு ஏற்பட்டு தென்பெண்ணை ஆற்று வெள்ள நீர் ஊருக்குள் புகுந்ததில் 50 வீடுகள் பாதிப்புக்குள்ளானது.
விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 30ம் தேதி தொடங்கி 2 நாள்கள் கனமழை பெய்ததது. சாத்தனுார் அணையும் திறக்கப்பட்டு, 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால், 1ம் தேதி முதல் தென்பெண்ண ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விழுப்புரம் பகுதியில் குடியிருப்புகள், விவசாய நிலங்களில் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.
விழுப்புரம் அடுத்த தளவானுார் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு புதிதாக கட்டிய அணைக்கட்டு, அடுத்தாண்டில் பெய்த கனமழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அப்போது 50 மீட்டர் தொலைவுக்கு கரைப்பகுதி உடைந்து வெள்ளம் புகுந்ததில் விளைநிலங்கள் சேதமானது.
இந்நிலையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பணிகளை மேற்கொள்ள வெடிவைத்து அணைக்கட்டை தகர்த்தனர். அதன் பிறகு, புதிய அணை கட்டாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், உடைந்த அணைக்கட்டு பகுதி கரையோரம் மீண்டும் மண் அரிப்பு ஏற்பட்டு, வெள்ள நீர் 500 மீட்டர் தொலைவுக்கு உடைந்து, விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் மூழ்கடித்துச் சென்றுள்ளது.
அணைக்கட்டு கரை பகுதியிலிருந்த விவசாயி கோபாகிருஷ்ணனின் 2 ஏக்கர் நிலத்திலிருந்த கத்தரி, மிளகாய் பயிர்களும், அருகே பழனிசாமி என்பவரின் 2 ஏக்கர் கரும்பு பயிர்களும் இருக்கும் இடம் தெரியாமல் அடித்துச் சென்றுள்ளது.
மேலும், அங்கு கரையில் தளவனுார் தோப்பு பகுதியிலிருந்த 50 வீடுகளுக்குள்ளும் அதிகாலை நேரத்தில் வெள்ளநீர் புகுந்தது. கரையோரமுள்ள தளவனுார் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் வெள்ளநீர் புகுந்து, பள்ளியின் முதல் தளத்தின் வகுப்பறைகள், அலுவலக பகுதிகளில் வெள்ள நீர் மூழ்கடித்துச் சென்றது.
அங்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி சுற்றுச்சுவரையும் உடைத்துச் சென்றுள்ளது. பள்ளி முழுதும் சேரும், சகதியுமாகியுள்ளதோடு, உள்ளே இருந்த அலுவலக ஆவணங்கள், உபகரணங்கள் பாழாகியது.
ஆற்று வெள்ளநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, பள்ளி கட்டடத்தின் சுவரையொட்டி தற்போது வெள்ள நீர் செல்கிறது. அதனருகே 3 ஏக்கர் பரப்பில் இருந்த தோப்பு பகுதி அடித்துச் செல்லப்பட்டுள்ளது. தற்போது, ஆபத்தான நிலையில் தென்பெண்ணை ஆற்றை தொட்டபடி உள்ள அந்த பள்ளி மூடப்பட்டுள்ளது.
பொது மக்கள் ஆவேசம்
கடந்த 2021ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த அணைக்கட்டு உடைந்து, குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்து பாதித்தது. அப்போதே சரி செய்வதாக கூறியும் செய்யவில்லை. அடுத்த வெள்ளத்திற்கு வெடி வைத்து அணையை தகர்த்தனர். ஆனால், அணையின் மையத்தில் சுவர் அப்படியே இருப்பதால், தற்போது மழை வெள்ள நீர் அதில் திரும்பி ஊருக்குள் புகுந்துள்ளது. விவசாய நிலத்தை அடித்துச் சென்றுவிட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் வசித்து வருகிறோம். 5 வீடுகளின் சுவர்கள் விழுந்தும், ஒரு வீடு முழுவதும் விழுந்துவிட்டது. இதனால், இந்த தடுப்பணை சுவற்றை உடைத்து அகற்ற வேண்டும், புதிய தடுப்பணையை பாதுகாப்பாக கட்ட வேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி மக்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.