/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் மும்முனை மின்சார கட்டமைப்பு...அவசியம் விழுப்புரத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படுமா?
/
மாவட்டத்தில் மும்முனை மின்சார கட்டமைப்பு...அவசியம் விழுப்புரத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படுமா?
மாவட்டத்தில் மும்முனை மின்சார கட்டமைப்பு...அவசியம் விழுப்புரத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படுமா?
மாவட்டத்தில் மும்முனை மின்சார கட்டமைப்பு...அவசியம் விழுப்புரத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படுமா?
ADDED : பிப் 20, 2026 04:51 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விவசாயம் சார்ந்த விழுப்புரம் மாவட்டத்தில், தற்போது தொழில்துறை வளர்ச்சி பெற்று வருகிறது. போக்குவரத்துக்கேற்ற தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் பாதை வசதிகள் இருப்பதால் வளர்ச்சிக்கு உகந்த சூழல் உள்ளது. தற்போது, மாவட்டத்தில் திண்டிவனத்தில் தான் சிப்காட், சிட்கோ தொழிற்பேட்டை வந்துள்ளது. தலைநகர் விழுப்புரத்தில் தொழிற்பேட்டை இல்லை.
இதனால், விழுப்புரம் சுற்றுப்பகுதியில் தொழில் பூங்கா மற்றும் தொழிற்பேட்டை, வர்த்தக மையங்கள் அமைக்கப்பட வேண்டும். நம் மாவட்டத்தில் உள்ள உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த மதிப்பு கூட்டு தொழில் நிறுனங்கள் அவசியமாகும்.
மரக்காணத்தில் கடல் உணவு சார்ந்த தொழில்கள், சிறுதானிய அடிப்படையிலான உணவு பதப்படுத்துதல் மையம், அவுரி சாயத்தொழில்கள், பட்டுப்புழு வளர்ப்பு, நெசவு, மண்பாண்டம், களிமண் கைவினைப் பொருட்கள் உற்பத்திக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
பொற்கொல்லர் அதிகமுள்ள விழுப்புரத்தில் தங்க நகைகள் வடிவமைப்பு மற்றும் அது சார்ந்த தொழில்களை மேம்படுத்துவதுடன், அந்த தொழிலாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, அரசு திட்டப்படி மானிய உதவிகள் வழங்க வேண்டும்.
சிறு, குறு தொழில்களுக்கு முக்கிய தேவையான தடையற்ற மும்முனை மின்சாரம் அவசியமாகும். மின்சாரம் தான் பிரதான மூலதனம் என்பதால், தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப விழுப்புரம், கோலியனுார், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளின் 24 மணி நேர மும்முனை மின்சாரம் தேவையான இடங்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான மின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.
மின்பாதைகளில், 50 சதவீதத்திற்கும் மேல் தொழில் நிறுவனங்கள் இருந்தால்தான் இன்டஸ்ட்ரீயல் பீடர் மும்முனை மின்சார பாதை அமைக்கப்படும் என்ற விதியை தளர்த்தி, பூத்துறை, பட்டானுார், கோலியனுார், விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் தடையற்ற மும்முனை மின்சாரத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு, பின் தங்கிய விழுப்புரம் மாவட்டத்திலும் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடையவும், வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கும் தேவையான அடிப்படை வசதிகள், அத்தியாவசிய தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்.
தொழில் துறை மானியங்கள் மற்றும் மின் கட்டண சலுகைகள் வழங்க வேண்டும்.
அனைத்து பகுதிகளிலும் மும்முனை மின்சார வசதியுடன் கூடிய மின்சார இணைப்பு வசதிகள் மேம்படுத்த வேண்டும்.
தகவல் தொழில் நுட்பத்திற்கு தேவையான இன்டர்நெட் வசதிகளும் மேம்படுத்தி தர வேண்டும் என தொழில் முனைவோர்களும், சிறு, குறு தொழில் நிறுவனத்தினர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

