/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாதாள சாக்கடை திட்ட பணிகள்: பல ஆண்டுகளாக 'தொடரும்' இழுபறி; தி.மு.க., கவுன்சிலர் 'திடீர்' போராட்டம்
/
பாதாள சாக்கடை திட்ட பணிகள்: பல ஆண்டுகளாக 'தொடரும்' இழுபறி; தி.மு.க., கவுன்சிலர் 'திடீர்' போராட்டம்
பாதாள சாக்கடை திட்ட பணிகள்: பல ஆண்டுகளாக 'தொடரும்' இழுபறி; தி.மு.க., கவுன்சிலர் 'திடீர்' போராட்டம்
பாதாள சாக்கடை திட்ட பணிகள்: பல ஆண்டுகளாக 'தொடரும்' இழுபறி; தி.மு.க., கவுன்சிலர் 'திடீர்' போராட்டம்
ADDED : ஆக 08, 2025 11:43 PM

விழுப்புரம் : நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் இழுபறியாக உள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்த பிரச்னையை கண்டித்து, தி.மு.க., கவுன்சிலர் நேற்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் நகராட்சியில், கடந்த 2007 ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கியது. நகர பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை
சேகரிக்கும் பொருட்டு 14 ஆயிரத்து 150 குடியிருப்புகளை இணைத்து, 165. 68 கி.மீ., நீளத்திற்கு ரூ. 263 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்காடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் 76 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் மூலம், 11ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும், சாலமேடு பகுதியில் ரூ. 26. 8 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விழுப்புரம் நகராட்சி சாலமேடு பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் புதியதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயத்திற்கு பயன்படும் வகையில் நீரை வெளியேற்றுவது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவுற்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், பாதாள சாக்கடைப் பணிகள் மந்தமாக நடைபெறுவதால், ஆண்டுக் கணக்கில் இழுபறியாக உள்ளது.
விழுப்புரம் நகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்திட, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தரப்பில் திணறி வருகின்றனர். மேலும், மழைக் காலம் துவங்கிவிட்டால், பாதாள சாக்கடை பணிகளை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுமையடையாததால், பல கோடி ரூபாய் மதிப்பிலான தார் சாலைகள் மற்றும் சிமென்ட் சாலைகள் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள குழந்தைவேல் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் சமீபத்தில்தான் துவக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடையாத நிலை நீடிக்கிறது.
இப்பிரச்னையில், நகர் மன்ற சேர்மன், தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆகியோர் தனி கவனம் செலுத்திட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.