/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணி
/
திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணி
ADDED : ஜன 20, 2025 06:40 AM

முதல்வர் திறந்து வைக்க உள்ளதால் சுறுசுறு
திண்டிவனம்: திண்டிவனத்தில் ரூ.268 கோடி செலவில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணி இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திண்டிவனம் நகராட்சியில் ரூ.268 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட பணி கடந்த 2021ம் ஆண்டு துவங்கியது. குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நடைபெற்று வரும் இப்பணி 2023ம் ஆண்டில் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பணிகள் நீண்டு கொண்டே போகின்றது.
பாதாள சாக்கடை திட்டத்திற்காக 33 வார்டுகளிலும் மேன்ேஹால் அமைக்கும்பணிகள் முடிந்துள்ளது. அதே போல் தீர்த்தகுளம், வெங்டேஸ்வரா நகர், அகழிகுளம், அவரப்பாக்கம், வகாப் நகர், இந்திரா நகர் ஆகிய 6 இடங்களில் கழிவு நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, நகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் உந்து நிலையங்களிலிருந்து பைப் மூலம் கொண்டு செல்லப்படும் கழிவுநீர், சலவாதி ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மைக்ரோ கம்போசிங் மையத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
சலவாதி ரோட்டில், நகராட்சி மின்தகன மையத்திற்கு பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மைக்ரோ கம்போசிங் மையத்திற்கு வரும் கழிவுநீர் அனைத்தும் சுத்திகரித்து கர்ணாவூர் பாட்டை கடைசி பகுதியிலுள்ள வாய்க்காலில் விடப்பட உள்ளது.
இந்நிலையில் இம்மாத இறுதியில் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வர், திண்டிவனம் பாதாள சாக்கடை திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் வகையில் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.
இதுபற்றி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், '' தற்போது திண்டிவனம் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 98 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சலவாதி ரோட்டிலுள்ள மைக்ரோ கம்போசிங் பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றனர்.
பாதாள சாக்கடை பணிகள் முடிந்து முதல்வர் கையால் திறப்பு விழா நடத்துவதற்கு முன், பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதே நகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.