/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வடியாத வெள்ள நீர்: விவசாயிகள் கவலை
/
வடியாத வெள்ள நீர்: விவசாயிகள் கவலை
ADDED : டிச 04, 2024 08:01 AM

செஞ்சி : செஞ்சி பகுதியில் பெஞ்சல் புயல் மழையால் மூழ்கிய நெற் பயிர்களில் தண்ணீர் வடியாமல் இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
செஞ்சி பகுதியில் கடந்த 30ம் தேதி இரவு பெஞ்சல் புயலின் போது செஞ்சியை சுற்றி உள்ள 40 கி.மீ., சுற்றுளவிற்கு வரலாறு காணாத கன மழை பெய்தது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பம்பட்டு, போத்துவாய், கொணலுார், கணக்கன்குப்பம், மலையரசன்குப்பம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமங்களில் ஏரிகள் உடைந்து தண்ணீர் வெளியேறியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சென்றதால் செஞ்சி - விழுப்புரம், ஆலம்பூண்டி - மழவந்தாங்கல், அப்பம்பட்டு - மணலப்பாடியிடையே சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டது.
வெள்ளதால் 10 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. மழை நின்று மூன்று நாட்கள் ஆன பிறகும் வெள்ளம் வடியாமல் விவசாய நிலங்களில் பாய்ந்து வருகிறது. அத்துடன் ஏரிக்கு கீழே உள்ள நிலங்களில் தண்ணீர் ஊற்றெடுத்து பயிர்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கனமழையினால் நேற்று வரை 111 வீடுகளின் சுவர்கள் இடிந்தன. இதில் 11 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. 3 மாடுகள் 13 கன்று குட்டிகள். 11 ஆடுகள் இறந்தன. மேலும் 3 மாடுகளும், 20க்கும் மேற்பட்ட ஆடுகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசு உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி அடுத்து பயிர் செய்வதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.