/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
5 ஆண்டாக ஏரிக்கு தண்ணீர் வராததால் கொந்தளிப்பு: விவசாயிகள்,பொதுமக்கள் சாலை மறியல்
/
5 ஆண்டாக ஏரிக்கு தண்ணீர் வராததால் கொந்தளிப்பு: விவசாயிகள்,பொதுமக்கள் சாலை மறியல்
5 ஆண்டாக ஏரிக்கு தண்ணீர் வராததால் கொந்தளிப்பு: விவசாயிகள்,பொதுமக்கள் சாலை மறியல்
5 ஆண்டாக ஏரிக்கு தண்ணீர் வராததால் கொந்தளிப்பு: விவசாயிகள்,பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஜூலை 02, 2024 06:08 AM

செஞ்சி: வராகநதியில் கட்டப்பட்டுள்ள கூடப்பட்டு அணை கால்வாயை 10 ஆண்டாக சீரமைக்காமலும், உடைந்த மடையை சரி செய்யாமலும் அரசுத்துறையினர் அலட்சியமாக இருந்ததால் 10 ஆண்டாக 5 ஏரிகள் நிரம்ப வில்லை. 2 ஆண்டாக மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று கிராம மக்கள் பஸ்களை சிறைபிடித்து 2 மணிநேராம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
செஞ்சி பகுதிக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது சங்கராபரணி ஆறும், வராகநதியும். சங்கராபரணி ஆறு மேல்மலையனுார் ஏரியின் உபரி நீர் வெளியேறும் இடத்தில் துவங்குகிறது. வராகநதி பாக்கம் மலை காடுகளில் துவங்குகிறது. வராகநதி மேலச்சேரி அருகே சங்கராபரணி ஆற்றில் இணைகிறது.
சங்கராபரணி ஆற்றில் கலப்பதற்கு முன்னதாக வராகநதியின் குறுக்கே கூடப்பட்டு என்ற இடத்தில் 1915ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் தடுப்பணை கட்டினர்.
வராகநதியில் வெள்ளம் வரும் போது தடுப்பணையில் இருந்து செல்லும் 10 கி.மீ., கால்வாய் மூலம் மேலச்சேரி சன்னியாசி ஏரி, சிங்கவரம் பெரிய ஏரி, குப்பத்து ஏரி, சிறுகடம்பூர் பெரிய ஏரி, நாட்டேரிக்கு தானாக தண்ணீர் வந்து விடும்.
அணையில் திறப்பது, மூடுவது என எந்த வேலையும் இல்லை. இந்த ஐந்து ஏரிகள் மூலம் 900 ஏக்கர் நிலம் பசனம் பெறுகிறது.
இந்த கால்வாயில் பூனை கண் மடை என்ற இடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கரையில் உடைப்பு ஏற்பட்டது. விவசாயிகள் சில ஆண்டுகள்வரை மணல் மூட்டைகளை கொண்டு உடைப்பை தற்காலிகமாக சரி செய்து ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வந்தனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கால்வாய் சீரமைத்த போதும் பூனைகண் மடையை தற்காலிகமாக சரி செய்து அந்த ஆண்டு மட்டும் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வந்தனர்.
அடுத்து சில ஆண்டுகளில் விவசாயிகள் காட்டுக்குள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். பொதுப்பணித்துறையினர் வனத்துறை அனுமதி தரவில்லை என காரணம் காட்டி உடைப்பை சரி செய்யாமல் கைவிட்டனர்.
ஒன்றிய நிதியில் இருந்து உடைப்பை சரி செய்ய நிதி ஒதுக்கியும் வனத்துறை அனுமதி தராததால் அந்த பணியும் ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு ஐந்து ஆண்டாக ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை. ஏரிகள் நிரம்ப வில்லை.
கடந்த 3 ஆண்டாக மேலச்சேரி கிராம இளைஞர்களும் பொது மக்களும் கலெக்டர், மாவட்ட வன அலுவலர், பொதுப்பணித்துறை மாவட்ட பொறியாளர், செஞ்சி வனத்துறை அலுவலகம் என தொடர்ச்சியாக பல முறை மனு கொடுத்தனர். கடந்த ஆண்டு செஞ்சி வனத்துறை அலுவலகத்தை 200 பேர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதன் பிறகும் அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று காலை 9.30 மணிக்கு விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் செஞ்சி- மேல்மலையனுார் சாலையில் மேலச்சேரி பஸ் நிறுத்தத்தில் மூன்று அரசு பஸ்கள், ஒரு தனியார் பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, மேல்மலையனுார் தாசில்தார் முகமது அலி, பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு உதவி பொறியாளர் தெரேசா ஆகியோரின் சமாதானத்தை பொது மக்கள் ஏற்க வில்லை. பொது மக்களின் கொந்தளிப்பு அதிகமானதால் போலீசார் செஞ்சி வனச்சரகர் பழனிச்சாமியை அங்கு வரவழைத்தனர்.
அவர், பூனைகண் மடையை சீரமைக்க திட்டம் அனுப்பப்பட்டுள்ளது. நிதி கிடைத்ததும் உடைப்பு சரி செய்யப்படும் என உறுதியளித்தார். அத்துடன் அங்கிருந்த அதிகாரிகள் கூட்டாக வரும் 3ம் தேதி மேல்மலையனுாரில் இது குறித்து சமாதான கூட்டம் நடத்தப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து 11.30 மணிக்கு கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
5 ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல வேண்டிய மிக முக்கிய கால்வாயின் உடைப்பை சரி செய்யாமல் அரசுத்துறைகள் 20 ஆண்டாக மெத்தனமாக இருந்ததன் விளைவாக கிராம மக்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தியதும், விழிப்புணர்வுடன் கேள்வி எழுப்பியதும் அதிகாரிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.