விழுப்புரம் ரயில்நிலைய மேம்பாட்டு பணிகள் தாமதம்: அம்ரித் பாரத் மேம்பாடு திட்டம் துரிதமாகுமா?
விழுப்புரம் ரயில்நிலைய மேம்பாட்டு பணிகள் தாமதம்: அம்ரித் பாரத் மேம்பாடு திட்டம் துரிதமாகுமா?
ADDED : நவ 18, 2026 07:52 PM

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரூ.25 கோடியில் நடந்து வரும் அம்ரித் பாரத் திட்ட மேம்பாட்டு பணிகள் மூன்று ஆண்டுகளைக் கடந்தும் மிக தாமதமாக நடந்து வருவதால், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் முக்கிய, 77 ரயில் நிலையங்களில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பாதுகாப்பு வசதிகளுடன் புதுப்பிக்கும், அம்ரித் பாரத் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த 2023 ஆகஸ்டில், பிரதமர் மோடி, காணொளி காட்சி வாயிலாக இப்பணியை துவக்கி வைத்தார்.
தமிழகத்தில், வட–தென் மாவட்டங்களை இணைக்கும், முக்கிய ரயில்வே சந்திப்பாக உள்ள விழுப்புரம் ரயில் நிலையத்தையும் ரூ.25 கோடியில் புதுப்பிக்கும் பணிகள் துவங்கியது.
இத்திட்டப்படி, ரயில்நிலைய வாயிலில் புதிய ஆர்ச் மற்றும் ரயில் நிலைய முகப்பு புதிய கட்டமைப்புகளுடன் புதுப்பித்தல், ஏ.சி., பயணிகள் காத்திருப்பு கூடம், புதிய நடை மேம்பாலம், 6 பிளாட்பாரங்களும் புதுப்பித்து மேம்படுத்துதல், அனைத்து பிளாட்பாரங்களிலும் லிப்ட் வசதி, புதிய எக்சிலேட்டர், வாகனங்கள் நிறுத்துமிடம், ரயில் பாதைகள் புதுப்பிப்பு, சி.சி.டி.வி., கண்காணிப்பு, பாதுகாப்பு சுற்றுச்சுவர் என திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக, விழுப்புரம் ரயில் நிலையத்தின் பழைய டிக்கெட் கவுன்ட்டர், காவல் நிலையம், பழைய நடை மேம்பாலம் போன்றவை இடிக்கப்பட்டு, புதிய டிக்கெட் கவுன்ட்டர்கள், பார்சல் அலுவலகம், ரயில்வே காவல் நிலையம், பயணிகள் காத்திருப்பு கூடம், உணவகம், பிளாட்பாரங்களில் லிப்ட் வசதி போன்ற பணிகள் படிப்படியாக முடிக்கப்பட்டுள்ளன.
தற்போது, ரயில்நிலைய முகப்பு கட்டமைப்பு பணிகள், சுற்று சுவர் பணிகள் நடக்கிறது. மிக முக்கிய தேவையான நடை மேம்பாலம் கட்டமைப்பு பணி, தாமதமாக தொடங்கி நடந்து வருகிறது. இதனால், ஒன்றரை ஆண்டில் முடிப்பதாக குறிப்பிட்ட, விழுப்புரம் ரயில்நிலைய மேம்பாட்டு பணிகள், 3 ஆண்டுகளை கடந்து மிகவும் தாமதமாகி வருகிறது.
தமிழகத்தில், இத்திட்டத்தில் பல ரயில் நிலையங்களில் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஆனால், அதிக ரயில்கள், அதிக பயணிகளை சந்திக்கும் ‘ஏ’ தரத்திலான விழுப்புரம் ரயில் நிலையத்தின் மேம்பாட்டு பணிகள் விரைந்து முடிக்காமல், கடந்த, 3 ஆண்டுக்கும் மேலாக ஜவ்வாக நீண்டுகொண்டு செல்கிறது.
ரயில்நிலைய மேம்பாட்டு பணிகள் முடியாத நிலையில், ரயில் நிலையத்தில் ஏற்கனவே இருந்த வழிகள் மூடப்பட்டு கேட் போட்டுள்ளனர்.
இதனால், ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள், பிரதான முகப்பு வாயில் பகுதிக்கு நீண்ட தொலைவு சென்று அவதிப்பட்டு வருகின்றனர். பயணிகள் சிலர், கேட் ஏறி குதித்து செல்லும் நிலையும் தொடர்கிறது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
விழுப்புரத்தில் அம்ரித் பாரத் திட்டப்பணிகள் விரைவாக நடந்து வருகிறது. ரயில் நிலையத்திற்கான அடுத்தடுத்த கோரிக்கைகள், வசதிகளுக்கான கட்டமைப்பு பணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அனுமதித்து, அவைகளும் தொடர்ச்சியாக நடப்பதால், மேம்பாட்டு பணிகள் நீண்டு வருகிறது. இப்பணிகள் வரும் மே மாதத்திற்குள் முடிக்கப்படும்.
தற்போது ரயில்கள் அதிவேகமாக செல்வதால், பயணிகளின் பாதுகாப்புக்காக, ஒரு பாதை, ஒரே வழி என்ற அடிப்படையில், பிரதான நுழைவு வாயில்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். இதர வழிகள் அடைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
