/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் கால்நடை மருத்துவமனை... அமைக்கப்படுமா? மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை
/
திண்டிவனத்தில் கால்நடை மருத்துவமனை... அமைக்கப்படுமா? மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை
திண்டிவனத்தில் கால்நடை மருத்துவமனை... அமைக்கப்படுமா? மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை
திண்டிவனத்தில் கால்நடை மருத்துவமனை... அமைக்கப்படுமா? மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை
ADDED : நவ 25, 2024 05:28 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் கால்நடை மருந்தகத்தை, கால்நடை மருத்துவமனையாக கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் தீயணைப்பு நிலையம் பின்புறம், கால்நடை மருந்தகம் கடந்த 1927ம் ஆண்டிலிருந்து செயல்பட்டுவருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்த வரை, விழுப்புரம், தேவனுார், செஞ்சி, வல்லம் ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவமனை உள்ளது. ஆனால் திண்டிவனத்தில் கால்நடைகளுக்கு தனியாக மருத்துவமனை இல்லாமல் இருப்பது, கால்நடை வைத்திருப்பவர்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
திண்டிவனத்தில் உள்ள இந்த கால்நடை மருந்தகம் காலை 8:00 மணியிலிருந்து மதியம் 12:00 மணி வரையிலும், பிற்பகல் 3:00 மணியிலிருந்து 5:00 மணி வரை செயல்படுகிறது. இந்த மருத்துவமனை வளாகத்திலேயே கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ளது.
இங்குள்ள மருந்தகத்தில், கால்நடைகளுக்கு ஏற்படும் ஆரம்ப நிலை மருத்துவம் மட்டுமே பார்க்க முடியும். இது இல்லாமல் கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்படுகிறது.
கால்நடைகளுக்கு ரத்த பரிசோதனை, அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிக்கலான மருத்துவ சிகிச்சை அனைத்தும், விழுப்புரம் மற்றும் செஞ்சி பகுதியிலுள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதுமட்டுமின்றி, 40 கி.மீ., துாரம் உள்ள புதுச்சேரி அரசு கால்நடை மருத்துவ கல்லுாரிக்கு கால்நடைகளை வேனில் வாடகை கொடுத்து சிகிச்சைக்கு கொண்டு செல்கின்றனர்.
கால்நடை மருந்தகம் அமைந்துள்ள இடத்தில் இருக்கும் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தின் கீழ் 40 கால்நடை மருந்தகம் செயல்பட்டு வந்தாலும், இந்த இடத்தில் தனியாக கால்நடை மருத்துவமனை இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கால்நடை மருந்தகத்திற்கு செயற்கை கருவூட்டலுக்காக தினந்தோறும் குறைந்தது 10 கால்நடைகள் கொண்டு வரப்படுகிறது. இது இல்லாமல் வீட்டில் வளர்க்கப்படும் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளும், வனத்துறை அலுவலகத்திலிந்து காயம்பட்ட வன விலங்களும் சிகிச்சைக்காக கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறு கொண்டு வரப்படும் கால்நடைகள், வன விலங்களுக்கு தேவைப்படும் உயர்சிகிச்சை மருத்துவம், கால்நடை மருந்தகத்தில் அளிக்க முடியாது என்பதால் புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. உயர்சிகிச்சைக்கு செல்லும் போது, பல கால்நடைகள் வழியிலேயே இறந்து விடுகின்றன. இதனால் கால்நடைகளை நம்பி இருக்கும் நடுத்தர மக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
திண்டிவனம் கால்நடை மருந்தகத்தை, கால்நடை மருத்துவமனையாக மாற்றுவதற்கு, விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், கால்நடை துறை அதிகாரிகள், துறை அமைச்சர் ஆகியோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே, கால்நடை வளர்ப்பவர்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.