/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மார்க்கெட் கமிட்டிகளில் அடிப்படை வசதிகள்... மேம்படுத்தப்படுமா?: கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
மார்க்கெட் கமிட்டிகளில் அடிப்படை வசதிகள்... மேம்படுத்தப்படுமா?: கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மார்க்கெட் கமிட்டிகளில் அடிப்படை வசதிகள்... மேம்படுத்தப்படுமா?: கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மார்க்கெட் கமிட்டிகளில் அடிப்படை வசதிகள்... மேம்படுத்தப்படுமா?: கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : அக் 31, 2025 02:33 AM

விழுப்புரம்:  மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி, திண்டிவனம், அரண்டநல்லுார் (திருக்கோவிலுார்), விக்கிரவாண்டி, மரக்காணம் ஆகிய மார்க்கெட் கமிட்டிகள் இயங்கி வருகின்றன. இவற்றை ஆன்-லைன் முறையில் ஒருங்கிணைத்து, சந்தை நிலவரம், பொருட்களின் தினசரி விலை, முக்கிய பொருட்கள் வரத்து, வானிலை நிலவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இந்த கமிட்டிகளில் தினந்தோறும் சராசரியாக ரூ.50 லட்சம் வரை விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அறுவடை சீசன் நேரத்தில் நெல், மணிலா, பருத்தி உள்ளிட்டவைகளி வரத்து பல மடங்கு அதிகரித்து, கோடிக்கணக்கில் கொள்முதல் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் மாவட்டத்தில் மார்க்கெட் கமிட்டிகள் மூலம்  நுாறு கோடி ரூபாய்க்கும் மேலாக, விளைபொருட்கள் கொள்முதல் நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல மார்க்கெட் கமிட்டிகளில், விளைபொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கான குடோன் வசதி, விவசாயிகளுக்கான கழிப்பறை வசதி, ஓய்வுக்கூடம் உள்ளிட்டவை பற்றாக்குறையாக உள்ளது.
விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியை, துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு செய்தபோது, கழிப்பறை வசதி சரியில்லை என விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவித்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கழிப்பறை வசதியை சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு அவர்
உத்தரவிட்டார்.
இதையடுத்து, விழுப்புரம் கமிட்டியில் நவீன முறையில் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டன. மேலும், வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுடன் கமிட்டி நிர்வாகம் ஆலோசனை செய்து, கழிப்பறையை துாய்மையாக பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேபோல், மற்ற மார்க்கெட் கமிட்டிகளிலும், நவீன கழிப்பறை வசதியை ஏற்படுத்துவதுடன், உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் அவற்றை துாய்மையாக பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக குறைந்தபட்ச கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம்.
காத்திருப்பு கூடம் கமிட்டியில் நெல், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட விளைபொருட்கள் வரத்து சீசன் நேரத்தில் அதிகளவில் இருக்கும்.
அதுபோன்ற நேரங்களில் விளைபொருட்களை விற்பனை செய்த பின், பணத்தை பெறுவதற்காக விவசாயிகள் பலரும் கமிட்டி வளாகத்தில் மாலை வரை காத்திருக்கும் நிலை உள்ளது. அப்போது, விவசாயிகள் ஓய்வாக அமர்வதற்காக காத்திருப்பு கூடவசதியை ஏற்படுத்திட வேண்டும்.
கூடுதல் குடோன் வசதி மார்க்கெட் கமிட்டிகளில் வரத்து அதிகரிக்கும்போது, மழை காலங்களில் தார் பாய்கள் மூடி, விளைபொருட்களை பாதுகாப்பாக வைக்கின்றனர்.
ஒரு சில நேரங்களில் தொடர்மழை காலங்களில் விளைபொருட்கள் சேதமாகக்கூடிய அபாயம் உள்ளது. இதனால், அனைத்து கமிட்டிகளிலும், விளைபொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கான குடோன் வசதியை கூடுதலாக ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளை, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கமிட்டிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

