/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொங்கல் பண்டிகைக்கு முன் நிவாரணம்... கிடைக்குமா?: மழையால் பாதித்த விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
பொங்கல் பண்டிகைக்கு முன் நிவாரணம்... கிடைக்குமா?: மழையால் பாதித்த விவசாயிகள் எதிர்பார்ப்பு
பொங்கல் பண்டிகைக்கு முன் நிவாரணம்... கிடைக்குமா?: மழையால் பாதித்த விவசாயிகள் எதிர்பார்ப்பு
பொங்கல் பண்டிகைக்கு முன் நிவாரணம்... கிடைக்குமா?: மழையால் பாதித்த விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 29, 2025 06:11 AM
செஞ்சி: விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் பாதித்த பயிர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக நிவாரண தொகையை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்களின் பிரதான வருவாயாக விவசாயமும், கால்நடை வளர்ப்பும் உள்ளது. பருவ நிலையை பொருத்து ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளின் வருவாயில் மாற்றம் இருக்கும்.
இந்த ஆண்டு பெரிய அளவில் வெள்ள பாதிப்பு இல்லை என்றாலும் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழையின் போது பெய்த கனமழையிலும், இம்மாதம் முதல் வாரத்தில் 'டிட்வா' புயல் காரணமாக பெய்த மழையின் போதும் வல்லம், மேல்மலையனுார், ஒலக்கூர், மரக்காணம், கோலியனுார் ஒன்றியங்களில் ஏராளமான ஏக்கர் பயிர்கள் சேதமானது.
இந்த பயிர் சேதங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தமிழக அரசு வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதில் மோசடி நடக்காமல் இருக்க வேளாண்மைத் துறையினர் புதிய செயலியை அறிமுகம் செய்தனர்.
அதன்படி அதிகாரிகள் பயிர் சேதமான இடத்திற்கு நேரடியாக சென்று, கூகுள் மேப் மூலம் இடம், நேரம், நாள், பாதிக்கப்பட்ட பயிர்கள் மத்தியில் விவசாயி இருப்பதை போன்ற புகை படத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர்.
இதில் 33 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட நெல், கரும்பு, வேர்க்கடலை பயிர்களுக்கு ஏக்கருக்கு 6,800 ரூபாயும், நீர்பாசனம் அல்லாத பனிப்பயிர்களுக்கு ஏக்கருக்கு 3,400 ரூபாயும், ஒரு ஏக்கருக்கும் குறைவாக பயிர் செய்திருந்த சிறு விவசாயிகளுக்கு 2,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
கணக்கெடுப்பில் மாவட்டத்தில் 275 விவசாயிகளின் 441 ஏக்கர் பயிர்கள் மழையில் சேதமானதை அதிகாரிகள் உறுதி செய்தனர். நெல், கரும்பு, வேர்க்கடலை சாகுபடி செய்திருந்த விவசாயிகளுக்கு 22 லட்சத்து 36 ஆயிரத்து 933 ரூபாயும், நீர் பாசனம் இல்லாத பனிப்பயிர்களுக்கு 3 லட்சத்து 83 ஆயிரத்து 233 என மொத்தம் 26 லட்சத்து 20 ஆயிரத்து 166 ரூபாயை தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரை அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. தமிழக விவசாயிகள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமானது பொங்கல் பண்டிகை. பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் ஒரு பகுதியையே அரசு நிவாரணமாக வழங்குகிறது.
பயிர் பாதிக்கப்பட்டதால் இவர்களுக்கு இந்த ஆண்டு அறுவடை இல்லை. எனவே அரசு வழங்கும் தொகையை பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

