/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண் உதவி இயக்குநர் காலி பணியிடம் நிரப்பப்படுமா? அரசு திட்டங்களை பெற விவசாயிகள் தவிப்பு
/
வேளாண் உதவி இயக்குநர் காலி பணியிடம் நிரப்பப்படுமா? அரசு திட்டங்களை பெற விவசாயிகள் தவிப்பு
வேளாண் உதவி இயக்குநர் காலி பணியிடம் நிரப்பப்படுமா? அரசு திட்டங்களை பெற விவசாயிகள் தவிப்பு
வேளாண் உதவி இயக்குநர் காலி பணியிடம் நிரப்பப்படுமா? அரசு திட்டங்களை பெற விவசாயிகள் தவிப்பு
ADDED : நவ 10, 2025 11:13 PM

விழுப்புரம்: மாவட்டத்தில் காலியாக உள்ள 3 வேளாண் உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்பாத தால், அரசு திட்டங்களை பெற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் 75 சதவீதம் மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர்.
மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பங்காக விவசாயம் விளங்குகிறது. இதில், 75 சதவீதம் குறு விவசாயிகள், 16 சதவீதம் சிறு விவசாயிகள் மற்றும் 9 சதவீதம் பிற விவசாயிகள் உள்ளனர்.
மாவட்டத்தில் கோலியனுார், காணை, கண்ட மங்கலம், விக்கிரவாண்டி, வானுார், ஒலக்கூர், மயிலம், மரக்காணம், செஞ்சி, வல்லம், மேல்மலையனுார், முகையூர், திருவெண்ணெய்நல்லுார் ஆகிய 13 வட்டாரங்களில் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த வட்டாரங்களுக்கு ஒரு வேளாண் உதவி இயக்குநர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு வட்டாரத்திற்கு, 30 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். இதில், 25, ஆயிரம் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த அலுவலகங்கள் மூலம், விவசாயிகளுக்கு தேவையான விதைகள், இடுபொருட்கள் பெற்று வழங்குவதோடு, அரசின் மானியம் மற்றும் மானியம் இல்லாத திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
மேலும், தங்கள் வட்டாரத்தில் இல்லாத விதைகள், இடுபொருட்களை மற்ற இடங்களில் இருந்தோ அல்லது மற்ற மாவட்டத்தில் இருந்தே வேளாண் உதவி இயக்குநர்கள் பெற்று வழங்கி வருகின்றனர்.
மேலும், அந்த வட்டாரத்தில் உள்ள விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி, பயிர் கணக்கெடுப்பு செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது.
விவசாய அடையாள அட்டை வழங்குவது. அந்தந்த பகுதிகளில் உரக்கடைகளில் ஆய்வு செய்து, இருப்பு மற்றும் அதன் தரம் குறித்து பரிசோதனை செய்வது உள்ளிட்ட ஒரு வட்டாரத்தில் விவசாயம் சார்ந்த அனைத்து பணிகளையும் உதவி இயக்குநர்கள் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், மேல்மலையனுார், செஞ்சி, முகையூர் வட்டாரங்களில் வேளாண் உதவி இயக்குநர் பணியிடம் காலியாக உள்ளது. இதேபோன்று, மேல்மலையனுார், வல்லத்தில் வேளாண் அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது.
இந்த காலி பணியிடங்களுக்கு, மற்ற வட்டாரங்களில் பணிபுரியும் வேளாண் உதவி இயக்குநர்கள் கூடுதல் பொறுப்பு வகித்து வருகின்றனர். இதனால், வேளாண் உதவி இயக்குநர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவது மட்டுமின்றி, இரண்டு வட்டாரங்களிலும் அவர்கள் மேற்கொள்ளும் பணி களில் தொய்வு ஏற்படுகிறது.
மேலும், அரசின் திட்டங்கள், இடுபொருட்கள், உபகரணங்கள் உள்ளிட்ட சலுகைகளை விவசாயிகள் பெறுவதற்கு, வேளாண் உதவி இயக்குநர்கள் சான்று வழங்க வேண்டும். இதனால், உதவி இயக்குநர்கள் பணியிடம் காலியாக உள்ள 3 வட்டாரங்களிலும் அரசு திட்டங்கள், சலுகைகளை பெற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
எனவே, மாவட்டத்தில் காலியாக உள்ள வேளாண் உதவி இயக்குநர்கள் மற்றும் வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

