/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அனுமதி இல்லாத பிளக்ஸ் பேனர்கள்... அகற்றப்படுமா; கலவரம் துாண்டும் வாசகங்களால் அபாயம்
/
அனுமதி இல்லாத பிளக்ஸ் பேனர்கள்... அகற்றப்படுமா; கலவரம் துாண்டும் வாசகங்களால் அபாயம்
அனுமதி இல்லாத பிளக்ஸ் பேனர்கள்... அகற்றப்படுமா; கலவரம் துாண்டும் வாசகங்களால் அபாயம்
அனுமதி இல்லாத பிளக்ஸ் பேனர்கள்... அகற்றப்படுமா; கலவரம் துாண்டும் வாசகங்களால் அபாயம்
ADDED : ஜூன் 16, 2025 12:45 AM

செஞ்சி: விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களில் கலவரத்தை துாண்டும் வகையிலான வாசகங்கள் இடம் பெறுவதால் கலவரம் ஏற்படும் அபாயகரமான சூழ்நிலை உருவாகி வருகிறது. இதை தடுக்க போலீஸ் உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாறிவரும் சமூக கலாச்சாரத்தில் பிளக்ஸ் பேனர்கள் முக்கிய இடம் பிடித்து விட்டன. பிறந்த நாளில் துவங்கி, மஞ்சள் நீராட்டு, திருமணம், கண்ணீர் அஞ்சலி, கோயில் விழாக்கள், பாராட்டு விழாக்கள், அரசியல் தலைவர்களின் பிறந்த நாள், பதவியேற்பு நாள், வரவேற்பு, சினிமா படம் ரிலீஸ் என அனைத்திற்கும் பிளக்ஸ் பேனர் வைக்கும் கலாச்சாரம் துவங்கி விட்டது. பிளக்ஸ் பேனர்களுக்கு அரசு விதிமுறை மற்றும் நீதிமன்ற வழி காட்டுதல் படியும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த விதிமுறைகள் எதைவும் கடைபிடிக்காமல் நகரங்களின் முக்கிய சாலைகளிலும், கிராமங்களின் குறுக்கு சந்திலும் பிளக்ஸ் பேனர்கள் நிரம்பி வழிகின்றன.
அரசியல் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் தலைவர் மீதுள்ள விசுவாசத்தை பிளக்ஸ் பேனர்கள் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
திருமணம் நடத்துபவர்கள் தங்களின் செல்வ செழிப்பை காட்ட நகரத்தையே பிளக்ஸ் பேனர்களால் மூழ்கடித்து விடுகின்றனர்.
திருவிழாக்களில் உபயதாரர்கள் போட்டி போட்டு தனித்தனியே பெரிய அளவில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கின்றனர். இது மட்டும் இன்றி அரசியல் கட்சிகள், சங்கங்கள் மாநில அளவில் நடத்தும் மாநாடு, பேரணி, பொதுக்குழு, செயற்குழுவிற்கும் பிளக்ஸ் பேனர்களை வைக்கின்றனர்.
இந்த பிளக்ஸ் பேனர்களை நீதிமன்ற தடை உள்ள இடங்களிலும், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் விழா நடப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக வைத்து விடுகின்றனர். விழா முடிந்து பல நாட்கள் கடந்தாலும் அகற்றுவதில்லை.
இதுபோன்ற பிளக்ஸ் பேனர்களில் வன்முறை துாண்டும் வகையிலும், எதிர் தரப்பை கோபமூட்டி வம்புக்கு இழுக்கும் வகையிலும் வாசகங்கள் இடம் பெறுகிறது. இதை பார்த்து கோபமடையும் எதிர் தரப்பினர், எதிர்வினையாக பதில் வாசகங்களுடன் பிளக்ஸ் பேனர்களை வைக்கின்றனர்.
இதுவரை அசம்பாவிதம் ஏதும் நடக்க வில்லை என்றாலும், எப்போது வேண்டுமானாலும் மாவட்டத்தில் ஜாதி மோதல் வெடிக்கும் அபாயம் உள்ளது. அத்துடன் பேனர்களை யாரேனும் குடி போதையில் கிழித்து விட்டால் இருதரப்பினரும் அடிதடியிலும், சாலை மறியலும் ஈடுபடுகின்றனர். சில தினம் முன்பு விழுப்புரம் அருகே பிளக்ஸ் பேனர் வைத்ததில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது.
பிளக்ஸ் பேனர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஒருபுறம் அச்சுறுத்தி வரும் நிலையில், மற்றொருபுறம் பொது மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்படும் பேனர்கள் காற்றில் முறிந்து விழுவதால் பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே விழுப்புரம் மாவட்டத்தில் பிளக்ஸ் பேனர்களை அரசின் வழிகாட்டுதல் நெறிகளின் படி உரிய அனுமதி பெற்று வைக்கவும், அதில் கலவரத்தை துாண்டும் வாசகங்கள் இடம் பெறாமல் இருக்கவும் போலீஸ் உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.