ADDED : மார் 02, 2025 05:58 AM
விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி வழியாக மானாமதுரை ரயில்வே வழித்தடம் மீட்டர் கேஜ் பாதையாக 1964ல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு பல்வேறு ரயில்கள் இயங்கியது. பின்னர் இந்த வழித்தடம் அகல ரயில் பாதையாக மாற்றியமைப்பதற்காக 2008ல் மூடப்பட்டது. பல கோடி ரூபாய் செலவில் அகல ரயில் பாதையாக்கப்பட்டு 2013 ஜூலை மாதம் முதல் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது.
இந்த ரயில் வழித்தடம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பிறகு அதிக அளவில் ரயில்கள் இயங்கும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை மிகவும் குறைந்த அளவிலான ரயில்களே இயங்கி வருகிறது. வாரத்தில் ஒரு நாள் மட்டும் புதுச்சேரி- கன்னியாகுமரி ரயிலும், 2 நாட்கள் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி ரயில், 3 நாட்கள் செங்கோட்டை -சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில், 6 நாட்கள் விருதுநகர்- காரைக்குடி டெமோ ரயிலும் இயங்கி வருகிறது. கடந்த 12 ஆண்டுகளாக தினசரி சேவையாக ஒரு ரயில்கூட இயக்கப்படவில்லை.
இதில் காரைக்குடி ரயில் மட்டுமே திருச்சுழி, நரிக்குடியில் நின்று செல்கிறது. மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் இங்கு நின்று செல்வது கிடையாது. இதனால் தங்கள் ஊரின் வழியாக ரயில்கள் இயங்கியும் சென்னை, வேளாங்கண்ணி, புதுச்சேரி போன்ற நகரங்களுக்கு பயணிக்கும் திருச்சுழி, நரிக்குடி மக்கள் அருப்புக்கோட்டை அல்லது மானாமதுரைக்கு சென்று தான் ரயிலில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
மாவட்டத்தின் மேற்கு பகுதி நகரங்களான ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான அரசு ஊழியர்கள் நரிக்குடி, திருச்சுழி பகுதி அரசு அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வந்து செல்ல ரயில் வசதிகள் இல்லை. இதனால் மிகுந்த சிரமத்திற்கு தினமும் ஆளாகி வருகின்றனர். பல கோடி ரூபாய் செலவு செய்தும் ஒரு நிமிடம் நின்று சென்றால் கூட வருவாய் அதிகரிக்கும் என்ற நிலையில் திருச்சுழி, நரிக்குடி ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில் நின்று செல்ல தெற்கு ரயில்வே நிர்வாகம் ஸ்டாப்பிங் வழங்காததால் வருவாய் இழப்பிற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் ஆட்பட்டு வருகிறது.
2 சட்டசபை தொகுதி, தாலுகா, ஊராட்சி ஒன்றியங்கள், ஏராளமான ஊராட்சிகள் கொண்ட இந்த பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்கப்படாதது ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியபோக்கை காட்டுகிறது. மேலும் இந்த வழித்தடத்தின் வழியாக கூடுதல் பயணிகள் ரயில் இயக்கினால் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கும் வருவாய் அதிகரிக்கும். திருச்சுழி, நரிக்குடி மக்கள் பயனடைவார்கள். அப்பகுதி தொழில், போக்குவரத்து ரீதியாக வளர்ச்சி அடையும்.
எனவே, இந்த வழித்தடத்தில் இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயில்களை திருச்சுழி, நரிக்குடி ரயில்வே ஸ்டேஷன்களில் ஒரு நிமிடம் நின்று செல்ல தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது திருச்சுழி, நரிக்குடி பகுதி மக்கள் மட்டுமின்றி விருதுநகர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.

