/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் மேலும் ஒரு வெடி விபத்து
/
சிவகாசியில் மேலும் ஒரு வெடி விபத்து
ADDED : மே 12, 2024 12:33 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம், சிவகாசி காத்தநாடார் தெருவைச் சேர்ந்த ராஜாராம், 47, என்பவருக்கு நாரணாபுரத்தில் நாக்பூர் உரிமம் பெற்ற மகேஸ்வரி பட்டாசு ஆலை உள்ளது. நேற்று அதிகாலை 5:55 மணிக்கு, பட்டாசு ஆலையில் வெடி மருந்து இருப்பு வைத்திருக்கும் அறையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.
சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் மூன்று அறைகள் தரைமட்டமாகின. தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு முன் விபத்து நடந்ததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
உற்பத்தி முடிந்து, மீதமிருந்த மணி மருந்தை இருப்பு வைத்துள்ளனர். அதில், வேதியியல் மாற்றம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
இதே பட்டாசு ஆலையில், 2023 மார்ச்சில் இதேபோன்று மணி மருந்து இருப்பு வைக்கப்பட்டிருந்த அறையில், இரவு 11:50 மணிக்கு வெடி விபத்து ஏற்பட்டது. ஒரே ஆலையில் மீண்டும் மீண்டும் இதேபோன்று விதி மீறலால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வாரத்திலேயே செங்கமலப்பட்டியில் இரு வெடி விபத்து, நாரணாபுரத்தில் ஒன்று என, அடுத்தடுத்து மூன்று வெடி விபத்து ஏற்பட்டதால், பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதற்கிடையே, செங்கமலபட்டியில், மே 9ல் சரவணன் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில், ஆறு பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்; ஒன்பது பெண்கள் உட்பட 14 பேர் படுகாயமடைந்தனர்.
விசாரணையில், ஆலையை விதிமீறி குத்தகைக்கு விட்டது, கூடுதல் பணியாளர்களை கொண்டு மரத்தடியில் பட்டாசு உற்பத்தி செய்தது, அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலான அளவு வெடி மருந்துகளை கையாண்டது, தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் பேன்சி ரக பட்டாசு உற்பத்தி செய்தது உள்ளிட்ட விதிமீறல்களால் விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டது தெரிய வந்தது.
ஆலை உரிமம் 2026 வரை உள்ள நிலையில், உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து, மத்திய பெட்ரோலியம் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.