
சாத்துார், : சாத்துார் வைப்பாற்றில் சாக்கடை நீர் கலப்பதால் நிலத்தடி நீர் மாசு அடைவதோடு விவசாயமும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
வெம்பக்கோட்டையில் 6 நதிகள் சங்கமிக்க வைப்பாறு உருவாகிறது. வெம்பக்கோட்டை அணை துவங்கி துாத்துக்குடி மாவட்டம் வேம்பாறு கடலில் கலக்கிறது.
முன்பு ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடிக் கொண்டிருந்த இந்த நதி தற்போது பலத்த மழை பெய்தால் மட்டுமே வெள்ளத்தை காண்கிறது.
சங்கரநத்தம் சாத்துார் பெரிய குள்ளபட்டி நாகலாபுரம் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. பல ஆயிரம் ஏக்கர் நிலம் இந்த நதியின் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது.
படந்தால் ஊராட்சி பகுதியில் இருந்து வெளியாகும் கழிவு நீரும் அண்ணாநகர், குருலிங்கபுரம், மேல காந்திநகர், கீழக்காந்தி நகர், அமீர்பாளையம், புதுப்பாளையம், போக்குவரத்து நகர் பகுதிகளில் இருந்து அதிக அளவில் சாக்கடை கழிவு நீர் ஆற்றில் கலந்து வருகிறது.
இதனால் ஆற்றில் தண்ணீர் மாசு அடைந்து வருகிறது. இதன் காரணமாக சாத்துார், பெரிய தொல்லப்பட்டி, தடுப்பணைகளில் சாக்கடை கழிவு கலந்த தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதன் வழியாக பாசனம் பெரும் விவசாய நிலங்கள் சாக்கடை கலந்த தண்ணீர் காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
வைப்பாறு மூலம் பாசன வசதி பெரும் விவசாயிகள் தற்போது ஆற்று தண்ணீரை பயன்படுத்த முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது.
இதனால் விவசாயிகள் தங்கள் நிலத்தில் கிணறுகள் தோண்டி அந்த தண்ணீரில் பாசனம் செய்து வருகின்றனர்.
ஆற்றில் கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு தனியார் போர்வெல் தண்ணீரும் மாசு அடைந்து வருகிறது.
ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடிய ஆற்றில் தற்போது சாக்கடை கழிவு நீர் ஆண்டு முழுவதும் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. சாத்துார் வைப்பாற்றில் சாக்கடை கலப்பதை தடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.
ஆற்றில் சாத்துார் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் உறை கிணறுகளிலும் கழிவு நீர் கலந்துள்ளதால் ஆற்றில் உள்ள உறை கிணறுகளை நகராட்சியால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்தி நல்ல மழை நீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சாத்துார் நகராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
முள்செடிகள் அகற்ற வேண்டும்
என்.ராமலிங்கம், சமுக ஆர்வலர் சாத்துார்: கடந்த காலங்களில் சாத்துார் பகுதி தொழிலதிபர்கள் இணைந்து மூன்று முறை ஆற்றை சுத்தம் செய்து முள் செடிகளை அகற்றினர். தற்போது ஆற்றில் மீண்டும் முள் செடி காடு போல வளர்ந்துள்ளது. முள் செடியின் காரத் தன்மையால் தண்ணீரின் தன்மை கெட்டு குடிக்க பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. முள் செடியையும் அகற்ற வேண்டும்.
சாக்கடையால் துர்நாற்றம்
பி.கேஸ்குட்டி, வியாபாரி: சாத்துார் வைப்பாற்று ரயில்வே பாலத்தில் ரயில்கள் செல்லும் போது அதில் பயணம் செய்யும் பயணிகளுக்கு துர்நாற்றம் வீசுவதாக பலர் கூறி வருகின்றனர். சாக்கடை வாடை வந்து விட்டால் சாத்துார் வந்து விட்டது என்று கேலி செய்கின்றனர். தொடர் மணல் திருட்டால் ஆற்றில் மணல் இல்லாமல் போனது.
அழகான மணல் திட்டு இருந்த இடம் தெரியவில்லை. ஆற்றில் குடிநீர் ஊற கிணறுகள் இருந்தும் குடிநீர் எடுத்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இயற்கை வளத்தை மீட்டெடுக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

