ADDED : மே 10, 2024 11:27 PM
விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது:
மாவட்டத்தில் மூன்று மாதங்களில் மட்டும் உள்குத்தகை, அதிக உற்பத்தி பொருட்களை இருப்பு வைத்தது, பதிவேடுகள் பராமரிக்காதது, அதிக தொழிலாளர்களை பணியில் அமர்த்தியது உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபட்ட 82 ஆலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், போர்மேன்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் சார்பில் பட்டாசு ஆலைகளில் விபத்தில்லாமல் பாதுகாப்பாக எப்படி பணிபுரிய வேண்டும் என, ஒரு மாத பயிற்சி சிவகாசி பட்டாசு பயிற்சி மையத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.
முதல் கடிதத்தின் அடிப்படையில் வருபவர்களுக்கு பயிற்சி முற்றிலும் இலவசம். இரண்டாம் முறை கடிதம் எழுதி பயிற்சிக்கு வந்தால் 5,000 ரூபாய், மூன்றாம் முறை கடிதம் எழுதிய பின் வந்தால், 10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். நான்காம் முறை கடிதம் எழுதியும் பயிற்சிக்கு வர தவறினால் சம்பந்தப்பட்ட ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும்.
மூன்று மாதத்திற்குள் அனைத்து பட்டாசு ஆலை போர்மேன்கள், கண்காணிப்பாளர்கள் இந்த பயிற்சியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். விபத்துகள், உயிர் சேதங்கள் இல்லாமல் உற்பத்தி செய்ய இந்த பயிற்சி முக்கியம். பயிற்சி பெறாத தொழிலாளர்களே அடிக்கடி நிகழும் பட்டாசு ஆலை விபத்துகளுக்கு ஒரு காரணமாக இருப்பதால் நிர்ணயித்த கெடுவுக்குள் பயிற்சி முடிக்காத போர்மேன், கண்காணிப்பாளர்களை கொண்டு பட்டாசு உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், 10 பேர் இறந்த வெடிவிபத்து தொடர்பாக நிறுவன போர்மேன் சுரேஷ் பாண்டியன், 41, குத்தகைதாரர் முத்துகிருஷ்ணன், 39, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.