/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டெபாசிட் தொகை கேட்டு அலையும் ஒப்பந்ததாரர்கள்
/
டெபாசிட் தொகை கேட்டு அலையும் ஒப்பந்ததாரர்கள்
ADDED : ஆக 27, 2024 06:14 AM
அருப்புக்கோட்டை : ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் செய்து முடித்த பின் ஒப்பந்ததாரர்களுக்கு அவர்களுடைய டெபாசிட் தொகையை வழங்காமல் ஊராட்சிகள் கையை விரிக்கின்றன.
ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகளின் தலைவர்கள் கவுன்சிலர்களின் பதவி காலம் முடிய 3 மாதங்கள் உள்ளது. இன் நிலையில் ஊராட்சிகளில் இருக்கின்ற தலைவர்கள் தங்கள் பதவி முடிவுற உள்ள நிலையில், ஊராட்சிகளில் இருக்கின்ற பணத்தை வளர்ச்சிப் பணிகளுக்காக செலவழிக்கின்றனர். ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் டெண்டர் எடுத்து வேலை செய்யும் ஒப்பந்ததாரர்கள் டெபாசிட் தொகை கட்டியுள்ளனர்.
இந்தத் தொகை லட்சக்கணக்கில் பல ஊராட்சிகளில் உள்ளன. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளில் பணிகள் செய்வதற்கு வந்தவர்கள் டெபாசிட் தொகை கட்டியுள்ளனர். பணிகள் முடித்த பின், அதிகாரிகள் ஆய்வு செய்து பில் பாஸ் ஆகி அதன்பின் ஆடிட் செய்யப்பட்டு டெபாசிட் தொகை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
ஆனால், நடையாய் நடந்தும் டெபாசிட் தொகை கிடைக்காமல் ஒப்பந்ததாரர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். டெபாசிட் தொகை கட்டிய பல ஊராட்சிகளில் அந்த பணத்தையும் வளர்ச்சிப் பணிகளுக்காக செலவழித்து விட்டனர். ஒப்பந்ததாரர்களிடம் ஊராட்சியில் நிதி இல்லை என்று அலட்சியமாக கூறுகின்றனர்.
ஊராட்சி தலைவர்களின் பதவி காலம் முடிவதற்குள் டெபாசிட் தொகையை வாங்க ஒப்பந்ததாரர்கள் போராடுகின்றனர். பதவி காலம் முடிந்து விட்டால் டெபாசிட் தொகை கிடைக்க காலதாமதம் ஏற்படும் என்ற நிலையில் மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய டெபாசிட் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.