/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் தாமதமாகும் குடிநீர் சப்ளை
/
ஸ்ரீவி.,யில் தாமதமாகும் குடிநீர் சப்ளை
ADDED : பிப் 27, 2025 01:11 AM
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் குடியிருப்புகள் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் நிலையில் குடிநீர் சப்ளை தாமதமாகி வருகிறது. இதனை தவிர்க்க புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
2010க்கு முன்பு வரை உள்ளூர் நீராதாரமான செண்பகத்தோப்பு பேயனாறு நீராதாரம் மூலம் நகரில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதிகரித்த மக்கள் தொகை, குடியிருப்புகளின் எண்ணிக்கை காரணமாக 2006ல் தாமிரபரணி குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது.
இதன்படி திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் 12 திறந்த வெளி கிணறுகள் அமைத்து பம்பிங் மூலம் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு
கொண்டுவரப்பட்டு 2011 மார்ச் மாதம் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது
தற்போது 14 ஆண்டுகளான நிலையில் இத்திட்டத்தின்படி தினமும் வழங்க வேண்டிய 55 லட்சம் லிட்டர் குடிநீருக்கு பதிலாக 20 முதல் 30 லட்சம் லிட்டர் தான் வழங்கப்படுகிறது.
மேலும், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக தினசரி தாமிரபரணி குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் நகரில் குடிநீர் சப்ளை தாமதமாகி வருகிறது.
எனவே, தற்போதைய தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், அடுத்து வரும் 10 ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரிப்பின் தேவையான குடிநீர் கிடைக்கும் வகையிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு என தனியாக புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன் கூறியதாவது;
நகராட்சியில் குடியிருப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அமைச்சர்களின் கவனத்திற்கு இக்கோரிக்கை குறித்து நேரடியாக கொண்டு சென்றுள்ளோம். தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

