/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால் விவசாயம் பாதிப்பு காரியாபட்டி எஸ்.தோப்பூர் மக்கள் பரிதவிப்பு
/
மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால் விவசாயம் பாதிப்பு காரியாபட்டி எஸ்.தோப்பூர் மக்கள் பரிதவிப்பு
மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால் விவசாயம் பாதிப்பு காரியாபட்டி எஸ்.தோப்பூர் மக்கள் பரிதவிப்பு
மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால் விவசாயம் பாதிப்பு காரியாபட்டி எஸ்.தோப்பூர் மக்கள் பரிதவிப்பு
ADDED : செப் 05, 2024 04:20 AM

காரியாபட்டி : காரியாபட்டி எஸ்.தோப்பூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் 360 ஏக்கர் பரப்பளவில், 2.75 கி.மீ. சுற்றளவில் உள்ளது. 4 மடைகள்உள்ளன. 650 ஏக்கரில் நெல் விவசாயம் நடந்தது. நீர்வரத்துக்கு ஆதாரமாக தெற்காற்றிலிருந்து வரத்து கால்வாய் உள்ளது. காரியாபட்டி பகுதியில் பெய்யும் மழை நீர் கண்மாய்க்கு வந்து சேரும். ஒரு முறை கண்மாய் நிறைந்தாலே இரு போகம் விவசாயம் நடக்கும்.
கண்மாயில் கிணறு தோண்டப்பட்டு இன்றுவரை குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. நாளடைவில் மழை சரிவர இல்லாதது, கால்வாய் துார்ந்து போனது உள்ளிட்ட காரணங்களால் கண்மாய்க்கு சரிவர தண்ணீர்வரத்து இல்லாமல் போனது. கண்மாய் முழு கொள்ளளவை எட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.
விவசாயம் செய்ய முடியாத சூழல் தான் தற்போதுள்ளது. கரைகள், மடைகள் சேதமடைந்துள்ளன. கிடைக்கிற ஓரளவு தண்ணீரையும் சேமிக்க முடியாமல் வீணாக வெளியேறுகிறது. சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்துவளர்ந்து வயல்கள் இருக்கும் இடமே தெரியாமல் போயுள்ளது.
இது ஒரு புறம் இருக்க, காரியாபட்டி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர், இக்கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாயில் செல்லும் வகையில் இணைத்துள்ளனர். அவ்வப்போது பெய்யும் மழைநீரில் கழிவுநீர் கலந்து கண்மாயில் தேங்குகிறது. ஒரு சில நாட்களிலே தண்ணீர் பச்சை பசேல் என நிறம் மாறுகிறது.
கால்நடைகள் தண்ணீர்பருகினால் தொற்று நோய் பரவுகிறது. ஆட்கள் தண்ணீரை பயன்படுத்தினால் உடலில் அரிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல் நிலத்தடி நீர் மாசடைந்து, குடிநீராக பயன்படுத்தி வரும் நிலையில் பெரும்பாலானவர்களுக்கு தொற்றுநோய் பரவி உப்புச்சத்து, சர்க்கரை, ரத்த கொதிப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதுடன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு பலர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அக்கிராமத்தினரின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது.
சீரமைக்க வேண்டும்
நடுக்கரையான், விவசாயி: கண்மாய் துார்வாரி 15 ஆண்டுகள் ஆகி விட்டன. முற்றிலும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து கண்மாய் இருக்கும் இடமே தெரியாமல் போயுள்ளது. விவசாயம்செய்ய முடியவில்லை. தரிசு நிலங்களாக போட்டதால் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து அடர்ந்து விட்டன. வயல்கள் இருக்கும் இடமே தெரியவில்லை.
விவசாயம் அழிந்து வருவது குறித்து கவலையாக உள்ளது. மறுபடியும் விவசாயம் செய்ய ஆர்வமாக உள்ளோம். வரத்து கால்வாய், கண்மாய் துார்வாரி சேதம் அடைந்த கரையை பலப்படுத்த வேண்டும்.
சிறுநீரக பாதிப்பு
சரவணமுத்து, விவசாயி: காரியாபட்டியில் இருந்து வெளியேறும் கழிவு நீர், வரத்து கால்வாய் வழியாக கண்மாய்க்கு வந்து சேருகிறது. நீர் மாசடைந்து நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. கிணறு, ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கழிவுநீரில் வரும் ரசாயனத்தால் நீர் மாசடைகிறது.
குடிநீராக, சமையலுக்கு பயன்படுத்தி வருவதால் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுவயதினருக்கு கூட உப்புச்சத்து, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி ஏற்படுகின்றன. பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நடவடிக்கை எடுக்கப்படும்
ராஜேஷ், உதவி செயற்பொறியாளர், பொதுப் பணித்துறை, காரியாபட்டி: கழிவு நீர் கலப்பது குறித்து மக்கள் புகார் தெரிவித்தனர். அதனை தடுப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.