ADDED : டிச 30, 2025 06:36 AM

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மின்வாரிய பராமரிப்பு பணியில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியானார். அலட்சியமாக செயல்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இழப்பீடு வழங்க கோரியும் சக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் முடங்கியாறு ரோட்டில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டத்தில் தனி மின் வழித்தடம் அமைக்கும் பணி தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் நடந்து வருகிறது.
இதில் ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்த கணேஷ் குமார் 22, ராஜபாளையம் முடங்கியாறு ரோட்டில் உள்ள உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறி பணியில் ஈடுபட்டிருந்தார். எதிர்பாராதவிதம் மின் இணைப்பு வழங்கப்பட்டதில் மின்சாரம் பாய்ந்து மின் கம்பியில் தொங்கிய நிலையில் இறந்தார்.
தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்க சென்ற போது எதிர்ப்பு தெரிவித்த ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை, இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் சமாதானமடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

